2.4 தஞ்சைப் பெரிய கோயிலில் கலை நுட்பம் |
தஞ்சைப் பெரிய கோயில் விமானம் கட்டுவதற்குச் சிறந்த பொறியியல் தொழில் நுட்பம் கையாளப்பட்டுள்ளது; அவ்வாறே முதற்கோபுர வாயிலாகிய கேரளாந்தகன் வாயில் கட்டுவதற்கும் சிறந்த பொறியியல் தொழில் நுட்பம் கையாளப்பட்டுள்ளது.
இந்தத் திருவாயில் 5 நிலைகளைக் கொண்டது; 96லு அடி நீளம், 50லு அடி அகலமுடைய அடிப்பீடத்தின் மேல் 113 அடி உயரம் கொண்டது. இது பற்றி நன்கு ஆராய்ந்த கட்டடக் கலை வல்லுநர் சு.இராசேந்திரன், மருத்துவர் கு.பாலகுமார வேலுவுடன் இணைந்து எழுதுகையில், “முதல் இரண்டு நிலைகள் கருங்கற் கட்டுமானமாகவும், அதன் மேலுள்ள மூன்று நிலைகள் செங்கற் கட்டுமானமாகவும் உள்ளன. முதல் இரண்டு நிலைகளின் சுவர்கள் முழுவதும் கருங்கற் கட்டுமானமாய் இருப்பினும், தளங்கள் (Floors) செங்கற் கட்டுமானமாய்த் தான் உள்ளன” என்ற கருத்தை வெளியிட்டுள்ளார் ; மேலும், “கருங்கற்களைப் பொறுத்தவரையில் ஒரு கல்லுக்கும் மறு கல்லுக்கும் இடையே சுண்ணாம்பு போன்ற எந்த ஒரு பிணைப்புச் சாந்தும் (Mortor) கிடையாது. கருங்கற்கள் சதுர அல்லது செவ்வக அமைப்பிலேயே இருக்க வேண்டும் என்றில்லாமல், கிடைக்கும் வடிவங்களை மட்டம் சுத்தம் செய்து அப்படியே கட்டுமானத்தில் பயன்படுத்தியிருப்பது சிறந்த திறமையாகும். இதனால் கட்டுமானத்தின் கற்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து (Strong staggered support) அந்தச் சுவரின் தாங்கு திறனைக் கூட்டுகிறது” என்று கூறியுள்ளார்.
அவ்விருவருமே, கேரளாந்தகன் வாயில் நிலைக்கால்களையும் செங்கல் தளத்தையும் பற்றி ஆராய்ந்து, “38’ x 4’ x 4’ அளவில் இரண்டு பெரிய நிலைக்கால்களும், அதற்கு மலோக விட்டமும் இணைப்பு இல்லாமல் ஒவ்வொரு கல்லாலேயே அமைத்திருப்பது மகத்தான சாதனையாகும். மேலும், நிலைக் கால்களின் பக்கவாட்டில் காடி (Grooves) வெட்டி அதனைச் சுவர்க்கட்டுமானத்தோடு இணைத்திருப்பது நுட்பமிகு கட்டிடக் கலைத் திறனாகும்.
முதல் மற்றும் இரண்டாம் நிலைகளின் சுவர்கள் கருங்கற் கட்டுமானமாய் இருப்பினும், தளங்கள் செங்கற்களாலேயே அமைந்துள்ளன. கருங்கற் சுவரில், தளத்திற்குக் கீழாகப் பிதுக்கம் (Corrice) கொண்ட ஒரு படை அமைத்து அதற்கு மலோக மரத்தாலான உத்திரங்களைச் (Rafters) சுவரில் அமைத்துள்ள துளைகளில் சொருகி, அதன்மேல் இரண்டு அடுக்காகச் செங்கற்களைச் சுண்ணாம்புக் காறையால் இணைத்துத் தளத்தினை உருவாக்கியுள்ளார்கள். இவ்வமைப்பில் உருவாக்கப்படும் தளங்களைத் தற்காலப் பொறியியல் துறையினர் மதராஸ்தளம் (Madras Terrace) எனக் குறிப்பிடுவர்....... இதே அமைப்பில் 5 நிலைகளின் தளங்களும் கட்டப்பட்டுள்ளன”, என்றும் கூறி அக்காலப் பொறியியல் தொழில் நுட்பத் திறனைப் புலப்படுத்தியுள்ளனர்.
ஒரு தளத்திலிருந்து மேலுள்ள தளத்திற்குச் செல்லும் படிக் கட்டுகளிலும் சிறந்த பொறியியல் நுட்பங் கையாளப்பட்டிருத்தலால் படியேறுபவர்களுக்குச் சிரமம் ஏற்படுவதில்லை.
தரமான சுண்ணாம்புக் காரையும் தேவைப்பட்ட இடத்தில் ஓரளவு பயன்படுத்தப்பட்டுள்ளது; 1000 ஆண்டுகளாகியும் செங்கற் கட்டுமானம் சிதையாமலிருப்பது பொறியியல் நுட்பத்தைப் புலப்படுத்தும்.
தொகுப்புரை
|
No comments:
Post a Comment