Friday, March 31, 2017

03. சூதமாமுனிவர்


03. சூதமாமுனிவர்
பெருமாள் திருமாலின் உந்தியில் பிரம்மதேவன் தோன்றி இவ்வுலகம் அனைத்தையும் படைத்தார். தவம் புரிவதற்குச் சிறந்த இடமாக ஆரணியங்களுலெல்லாம் அரசாக விளங்குவது நைமிசாரணியம்.

புராணங்களைச் சொல்வதில் வல்லவரான சூதமாமுனிவர் அங்கு வந்து கொண்டிருந்தார். வேத வேதாங்கங்களை ஐயந்திரிபற கற்று உணர்ந்தவர்களும் ஸ்ரீ-ஹரிகதா சங்கீர்த்தன சீலர்க்களுமான கவுனகர் முனிவர்கள் ஆசார சீலர்களாய், சொரூபத்தியானம் செய்பவர்களாய் கூடியிருந்தார்கள்.

சௌனகாதிமுனிவர்கள் எதிர்கொண்டு வரவேற்று நன்கு உபசரித்து உயர்ததொரு ஆசனத்தில் அமரச் செய்து பூஜித்து வணங்கினார்கள்.   அருந்தவ முனிவர்கள் அனைவரும் சூதபுராணிகளுக்கு அஞ்சலி செய்து,

“சூதமாமுனிவரே! தங்களிடமிருந்து பல புராணங்களை கேட்டு மகிழ்ந்திருக்கிறோம். ஆகவே விஷ்ணு சம்பந்தப்பட்ட உயர்ந்த ஒரு புராணத்தைத் தாங்கள் சொன்னால் நாங்கள் கேட்க மிகவும் ஆவலாக இருக்கிறோம். தாங்களோ பகவானின் அம்சமாக விளங்கும் வேதா வியாச முனிவரின் சீடர். நீங்கள் அறியாதது ஒன்றுமில்லை. தர்மார்த்த கர்ம மோட்சம் எனப்படும் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகைப்புருசார்த்தங்களையும் கொடுப்பதாகிய சாத்வீகமான புராணம் ஒன்றை தேவரீர் கருணை கூர்ந்து எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று பணிவோடு கேட்டார்கள்.
             
அவர்களின்  வேண்டுகோளுக்கு இணங்கி சூதமாமுனிவர் தம் குருநாதரான வியாச மகரிஷியின் திருவடித் தாமரைகளைத் தமது இருதயத்தில் தியானித்து, பிறகு சிரசின்மேல் தம்மிரு கரங்களையும் குவித்து, சர்வஜெகத்காரணனும், ரட்சகனுமான ஸ்ரீமத் நாராயணனைத் தொழுது வணங்கி பூஜித்து விட்டு, சௌனகாதி முனிவர்களை நோக்கி, “அருந்தவ முனிவர்களே! நீங்கள் நல்லதொரு கேள்வியை கேட்டீர்கள். தேவதேவன் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முப்பெருந்தொழில்களை செய்பவனும், புருசோத்தமனுமான  ஸ்ரீமத் நாராயணனை, முன்பு ஒரு சமயம் பட்சிராஜனான ஸ்ரீ கருடாழ்வான்  பணிந்து, இப்போது நீங்கள் என்னிடம் கேட்டது போன்றதொரு கேள்வியை உலக நன்மையின் பொருட்டுக் கேட்டான். அதற்கு ஸ்ரீமந் நாராயணன் தக்க விடையளித்தார். அந்தக் கதையை திருமால் கருடனுக்குக் கூறியவாறே நானும் உங்களுக்குச் சொல்கிறேன் கேளுங்கள்.” என்று சூதமாமுனிவர் கூற ஆரம்பித்தார்.

No comments:

Post a Comment

நரக தண்டனைகளை நிச்சயிப்பது நாமே....

01. தாமிஸ்ரம் பிறருக்கு சொந்தமான பொருளை அகபரிப்பது குற்றமாகும் . பிறருக்கு சொந்தமான மற்றவர் மனைவியை விரும்புவதும் , அபகர...