Saturday, January 13, 2018

நரக தண்டனைகளை நிச்சயிப்பது நாமே....




01. தாமிஸ்ரம்
பிறருக்கு சொந்தமான பொருளை அகபரிப்பது குற்றமாகும். பிறருக்கு சொந்தமான மற்றவர் மனைவியை விரும்புவதும், அபகரிப்பதும் பாவச்செயலாகும். அதே போல பிறரது குழந்தையை அபகரிப்பது மகாப்பாவமாகும். பிறரது பொருளை ஏமாற்றி அபகரிப்பது, நமக்கு தீராத துன்பத்தை தரும். இதற்க்கு தண்டனையாக, நரகத்தில் எமகிங்கரர்கள் முள்ளாலான கட்டைகளாலும், கதைகளாலும் நைய புடைப்பார்கள்.

02. அந்ததாமிஸ்ரம்
கணவனும் மனைவியும் சேர்ந்து மனமொத்து வாழ்வது அவசியம். அதை விடுத்து ஒருவரையொருவர் ஏமாற்றுதல் தவறாகும். கணவன் மனைவியை வஞ்சித்தலும், மனைவி கணவனை வஞ்சித்தலும் பாவச்செயலாகும். இத்தகையவர்கள் இந்நரகத்தில் உழன்று, கண்கள் தெரியாத நிலையில் இருள் சூழ மூர்ச்சையாகி விழுந்து தவிக்க வேண்டியது வரும்.

3. ரௌரவம்
பிறருடைய குடும்பத்தை, அதாவது வாழும் குடும்பத்தை பிரிப்பது, அழிப்பது, அவர்களின் பொருள்களை பறிப்பது என்பது குற்றமாகும். இதற்கு தண்டனையாக, ஜீவன்களை எமகிங்கரர்கள் சூலத்தில் குத்தி துன்புறுத்துவார்கள்.

04. மகாரௌரவம்
மிகவும் கொடூரமாக பிறர் குடும்பத்தை வதைத்தவர்கள், பொருளுக்காக குடும்பங்களை நாசம் செய்தவர்கள் அடையும் நரகம் மகா ரௌரவம் ஆகும். இங்கு குரு என்று சொல்லக்கூடிய, பார்ப்பதற்கு கோரமான மிருகம் காணப்படும். இவை பாவிகளை சூழ்ந்து முட்டி மோதி பலவகையில் துன்புறுத்தும்.

5. கும்பிபாகம்
சுவையான உணவுக்காக, வாயில்லா உயிர்களை வதைத்தும், கொன்றும் பலவிதங்களில் கொடுமைபடுத்தும் பாவிகள் அடையும் நரகமிது. எரியும் அடுப்பில் வைக்கப்பட்டிருக்கும் எண்ணெய் கொப்பறையில் போட்டு, எமதூதர்கள் பாவிகளை துன்புறுத்துவார்கள்.

06. காலசூத்திரம்
பெரியோர்களையும், பெற்றோர்களையும் அடித்து அவமதித்தும், துன்புறுத்தியும், பட்டினி பொட்டும் வதைத்து உதாசீனம் செய்த பாவிகள் செல்லும் நரகம் இதுவாகும். இங்கு அதே முறையில் அடி, உதை, பட்டினி என்று அவர்கள் வதைக்கப்படுவது உறுதி.

07. அசிபத்திரம்
தெய்வ நிந்தனை செய்தவர்களும், தர்மநெறியை விட்டு, அதர்ம நெறியைப் பின்பற்றியவர்களும் அடையும் நரகம் இது. இங்கு பாவிகள் பூதங்களால் துன்புறுத்தப்பட்டு அவதிபடுவார்கள். இனம் புரியாத பயம் உண்டாகும்.

08. பன்றி முகம்
குற்றமற்றவரை தண்டிப்பது கொடுமையாகும். நீதிக்கு புறம்பாக அநீதிக்கு துணைபோவதும் அதர்மமாகும். இந்நரகத்தில், பன்றிமுகத்துடனும் கூர்மையான பற்களுடனும் ஒரு வகை மிருகம் காணப்படும். அதன் வாயில் அகப்பட்டு, கூர்மையான பற்களால் கடிக்கப்பட்டு பாவிகள் அவதி படுவார்கள்.

09. அந்தகூபம்
உயிர்களை சித்ரவதை செய்தல், கொடுமையாக கொலை செய்தல் ஆகிய குற்றங்கள் புரிந்த பாவிகள் அடையும் நரகமிது. கொடிய மிருகங்கள் கடித்து குதறும் நிலை ஏற்படும். வித்திரமான மாடுகள் கீழே போட்டு மிதித்து துன்புறுத்தும்.

10. அக்னி குண்டம்
பிறருக்கு உரிமையான பொருள்களை, தனது வலிமையாலும் செல்வாக்காலும் அபகரித்து வாழ்ந்த பாவிகள், பலாத்காரமாக தனது கார்யங்களை நிறைவேற்றிக் கொள்பவர்கள் இந்த நரகத்தை அடைவார்கள். இங்கு பாவிகள் ஒரு நீண்ட தடியில் மிருகத்தைப்போல் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் எரியும் அக்னி குண்டத்தில் வாட்டி எடுக்கப்படுவார்கள்.

11. வஜ்ர கண்டகம்
சேரக்கூடாத ஆணையோ, பெண்ணையோ கூடித்தழுவி மகிழும் காமவெறியர்கள் அடையும் நரகம் வஜ்ர கண்டகம். நெருப்பால் செய்யப்பட்ட பதுமைகளை கட்டித்தழுவ ஜீவன்கள் நிர்பந்திக்கப்படுவார்கள். இதனால் உடல் எரிந்து துன்பப்படுவார்கள்.

12. கிருமிபோஜனம்
தான் மட்டும் உண்டு, பிறரது உழைப்பைச் சுரண்டிப் பிழைத்த பாவிகள் இங்கு தான் வரவேண்டும். பிறவற்றை துளைத்து செல்லும் இயல்புடையது கிருமிகள். இந்த நரகத்தில், பாவிகளை பலவிதமான கிருமிகள் கடித்து துளையிட்டு துன்புறுத்தும்.

13. சான்மலி
நன்மை, தீமை, பாபம் ஆகியவற்றை பாராமல், உறவுமுறையை கூட பாராமல் யாருடனாவது எப்படியாவது கூடி மகிழும் காமுகர்கள் அடையும் நரகம் இது. இங்கு இத்தகைய பாவிகளை முள்ளாலான தடிகளாலும், முட்செடிகளாலும் எம கிங்கரர்கள் துன்புறுத்துவார்கள்.

15. வைதரணி
அதிகாரபலத்தாலும், கபட நாடகத்தாலும், நயவஞ்சகத்தாலும் நல்வழிகளில் செல்லாமல் தர்மத்துக்கு புறம்பாக நடந்தவர்கள் அடையும் நரகமிது.
வைதரணி என்பது நதியல்ல, இந்த ஆற்றில் தண்ணீருக்கு பதிலாக ரத்தமும், சீழும், சிறுநீரும், மலமும் கலந்த கலவையே ஆறாக ஓடும்.
இந்த நதியில் கொடிய பிராணிகளும் வாசஞ்செய்யும். பாவிகள் இந்நதியை கடக்க முடியாமல், இதில் வீழ்ந்து துன்பப்படுவார்கள்.

16. பூயோகம்
சிறிதும் வெட்கம் இன்றி இழிவான பெண்களுடன் கூடி, ஒழுக்கக்குறைவாக நடந்து, வாழ்க்கையில் எந்த லட்சியமும் இல்லாமல் மிருகம் போல் வாழ்ந்தவன் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனை, விஷமுடைய பூச்சிகளும், பிராணிகளும் கடிக்கும்.

17. பிரயணயோகம்
பிராணிகளை கொடுமைப்படுத்தி கொலை செய்யும் கொடுமைக்காரர்கள் அடையும் நரகம் இது. இங்கு கூர்மையான பாணங்களை ஜீவன்களின் மீது எய்தி துன்புறுத்துவார்கள்.

18. விசஸவம்
பசுவில் எல்லாதேவதைகளும் இருக்கிறார்கள். அந்தப்பசுக்களை கொடுமை செய்பவர்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனுக்கு எமகிங்கரர்கள் சவுக்கடி கொடுத்து துன்புறுத்துவார்கள்.

18. லாலாபசூக்ஷம்
மனைவியை கொடுமை படுத்தி முறையற்ற மோக இச்சைக்கு ஆளாக்கிக் கெடுக்கும் கொடியவர்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனும் அதே முறையில் வதைபடும்.

19. சாரமேயதனம்.
வீடுகளுக்கு தீ வைப்பது, சூறையாடுவது, உயிர்களை வதைப்பது, விஷத்தை கொடுத்து கொல்லுதல், மக்களை கொன்று குவித்தல் போன்ற கொடிய பாவங்களை செய்தவர்கள் அடையும் நரகமிது.இங்கு விசித்திரமான கொடிய மிருகங்கள் ஜீவனை வதைக்கும்.

20. அவீசி
பொய்சாட்சி சொல்லி ஒருவருக்கு கெடுதலை விளைவிப்பவர் அடையும் நரகம் இது. நீர் நிலைகளில் ஜீவன்களை தூக்கிவீசி அழுத்துவார்கள்.

21. பரிபாதனம்
மதுவை தானும் உட்கொண்டு, பிறர்க்கும் கொடுத்து குடிமக்களை கெடுப்பவர்கள் அடையும் நரகம் இது. நெருப்புக்குழம்பை குடிக்கச்சொல்லி இங்கு வதைப்பார்கள்.

22. க்ஷாரகர்த்தமம்
தீய செயல்களை புரிந்தும், நல்லோரையும், பெரியோரையும் அவமதித்து, நானென்ற அகந்தையுடன் வாழ்ந்த ஜீவன்கள் அடையும் நரகம் இது. இங்கு கோரமான உருவம் கொண்ட பிசாசுகள் ஜீவனை துன்புறுத்தும்.

23. ரக்ஷோகனம்
நரமேத யாகம் செய்தவனும், மனித மாமிசத்தை புசித்தவனும், வாயில்லா சாதுவான பிராணிகளை வதைத்து கொடுஞ்செயல் புரிந்த பாவிகளும் அடையும் நரகமிது. இங்கு ஜீவன்களால் பாதிக்கப்பட்டவர்களே முன்னின்று வதைப்பார்கள். பாதிக்கப்பட்ட மிருகங்களும் வதைக்கும்.

24. சூலப்ரோகம்
தனக்கு எந்தவித கெடுதல்களையும் செய்யாதவர்களை கொல்லுதல், சூழ்ச்சி செய்து கொல்லுதல், தற்கொலை செய்து கொல்லுதல், நம்பிக்கை துரோகம் செய்தல் ஆகிய பாவச்செயல்களை செய்த ஜீவன்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவன்களை, கொடிய பறவைகள் குத்திக் குத்திக் குதறும், சூலத்தாலும் குத்துவார்கள்.

25. சுசீமுகம்
அறத்தை செய்யாமல் தீயவழிகளில் பொருளைச் சேர்த்து, பிறரை துன்புறுத்தி கர்வத்துடன் நடந்து, பொருள்களையும், பணத்தையும் பதுக்கி வைத்தவர்கள் அடையும் நரகம் இது. இங்கும் ஜீவன், உதவி செய்ய யாருமின்றி பசியாலும், தாகத்தாலும் தவிக்கும். எம தூதர்கள் துன்புறுத்துவார்கள்.

26. குந்தசூதம்
வாழ்க்கையில் பிறருக்கு நன்மை எது செய்யாமல் தீமையே செய்து வந்த பாவிகள் அடையும் நரகம் இது. இங்கு தேள் போன்று கொடிய விஷமுள்ள பிராணிகள், ஜீவன்களை கொடுக்குகளால் கொட்டித் துன்புறுத்தும்.

27. வடாரோகம்
பிராணிகளை கொடுமையாக வதைத்த பாவிகள் அடையும் நரகம் இதுவாகும். ஜீவன்களின் கைகளை கட்டி, நெருப்பு வைத்து துன்புறுத்துவார்கள்.

28. பர்யாவர்த்தனம்
விருந்தினர்களை உபசரிக்காமல் அவர்களை வெறுத்து நிந்தனை செய்த கஞ்சத்தனம் உள்ளவர்களும், விருந்தினர்களுக்கு உணவளிக்காமல் விரட்டியவர்களும் அடையும் நரகம் இது. இங்கு ஜீவன், உணவும்-நீரும் இன்றி பசியாலும் தாகத்தாலும் தவிக்கும்.

மரணம் இப்படித்தான் இருக்குமா - IV

மரணம் இப்படித்தான் இருக்குமா - IV

ரோப்பாவில் தென்கிழக்கு தீபகற்கபகுதியில் உள்ள வரலாற்றுப் பெருமைமிக்க கிரேக்க நாட்டிலும் இதே போன்ற ஒரு கதை உள்ளது. அந்தக் கதையில் டியூக்கேளியன் என்று ஒரு மனிதன் இருந்ததாகவும் அவனுக்கு பிர்ரஹா என்ற மனைவியின் மூலம் ஹெலின் என்ற மகன் இருந்ததாகவும் இந்த மகன் காலத்தில் உலகெங்கும் தீமை கோரமாகத் தலைவிரித்து ஆடியதாகவும் இதனால் கிரேக்கர்களின் பெரிய தெய்வம் கோபம் கொண்டு பூமியில் பெரும் மழையை
ஏற்படுத்தியதாகவும் இதனால் வெள்ளம் நாலாபுறமும் சூழ்ந்து உயிர்களைக் கபளிகரம் செய்ததாகவும் ஹெலினும் அவனது இளம் மனைவியும் படகில் தப்பி பூமியின் தெற்குப் பகுதிக்குச் சென்று மனித உற்பத்தியை ஆரம்பித்தாகவும் கிரேக்கக் கதை கூறுகிறது.
கிறிஸ்தவ வேதமான விவிலியத்திலும் மகாபிரளத்தைப் பற்றி பல குறிப்புகள் உள்ளன. மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகின்றது என்றும் அவன் இருதயத்தின் நினைவுகளில் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும் கர்த்தர் கண்டு தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காக மனஸ்தாபப்பட்டார். அது அவர் இருதயத்திற்கு விசனமாய் இருந்தது.

அப்பொழுது கர்த்தர் நான் சிருஷ்டித்த மனுஷனை பூமியின் மேல் வைக்காமல் மனுஷன் முதற்கொண்டு மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாயிருக்கின்றனவைகளை நிக்கிரஹம் பண்ணுவேன். நான் அவர்களை உண்டாக்கினது. எனக்கு மனஸ்தாபமாய் இருக்கிறது என்றார்.

அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி மாமிசமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது. அவர்களாவே பூமி கொடுமையினால் நிறைந்தது. நான் அவர்களை பூமியோடு கூட அழித்துப் போடுவேன்.

நீ கோப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழையை உருவாக்கு. அந்தப் பேழையிலே அறைகளை உண்டு பண்ணி அதை உள்ளும் புறமும் பிசின்களால் பூசு என்றார்.
கர்த்தரின் கடடளைபடி நோவா கோப்பேர் மரத்தால் பேழையைக் கட்டி முடித்து அதற்கு உள்ளும் புறமும் பிசின் பூசினார். அந்தப் பேழையின் அளவு கர்த்தரின் உத்தரவுபடி 300 அடி நீளமும் 50 அடி அகலமும் 30 அடி உயரமும் உள்ளதாக இருந்தது.

பேழை செய்யப்பட்ட பின்பு அதனுள் சகல வித மாமிசமான ஜீவன்களில் ஆணும் பெண்ணுமாக வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடி வீதமும் நோவாவும் அவர் குடும்பத்தினரும் பேழைக்குள் பிரவேசித்தனர் சகல ஜீவன்களிலும் மனிதர்களிலுமாக பேழைக்குள் ஏறிக்கொண்ட ஏழு நாட்களுக்குப் பிறகு நோவாவின் 600வது வயதில் இரண்டாம் மாசத்தில் 17ம் தேதியில் மகா பாதாளத்தின் ஊற்றுக் கண்களும் பிளந்தன. வானத்தின் மதகுகளும் திறவுண்டன.

இவ்வாறாக ஜலப்பிரளயம் 40 நாள் பூமியின் மேல் உண்டானபோதும் தண்ணீர் பெருகி பேழையைக் கிளம்பப் பண்ணியது. அது பூமிக்கு மேல் மிதந்தது. ஜலம் பெரும் வெள்ளமாகி பூமியெங்கும் மூழ்கலாயின. பின்னர் 7ம் மாதம் 17ம் தேதியில் பேழை ஹரராத் என்னும் மலையின் மேல் தங்கிற்று. 10ம் மாதம் முதல் ஜலம் வடியத் தொடங்கியது. மலைச்சிகரங்களும் மலைமேல் இருந்த மரங்களும் தெரிய ஆரம்பித்தன. (பைபிள் ஆதியாகமம் 6 முதல் 8ம் அதிகாரம் 4.5 வசனம் வரை.
கடல்கோள் பற்றி விவிலியம் இவ்வாறு விவரிக்க திருக்குரானும் இதைப் பற்றி விஸ்தாரமாகவே பேசுகிறது. நிச்சயாக நாம் நூகுவை அவர்களுடைய ஜனங்களிடம் (நம்முடைய) தூதராக அனுப்பி வைத்து அவரை நோக்கி உம்முடைய ஜனங்களுக்கு துன்புறுத்தும் வேதனை வருவதற்கு முன்னதாகவே அவர்களுக்கு (அதனை பற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் என்று கட்டளை இட்டோம்.

நமது கட்டளைப்படி நூகு அந்த ஜனங்களை நோக்கி எனது ஜனங்களே நிச்சசயமாக நான் உங்களுக்கு பகிரங்கமாகவே அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன். அவ்வாறு நீங்கள் வழிபாடுகளை இசைந்து நடத்துங்கள். அவ்வாறு நீங்கள் நடப்பீர்களானால் இறைவன் உங்கள் குற்றங்களை மன்னித்துக் குறிப்பிட்ட காலம் வரை உங்களை வாழ அனுமதிப்பான்.
நிச்சயமாக (வேதனைக்குக் குறிப்படப்படும்) இறைவனின் காலக்கெடு வரும் பட்சம் அது ஒரு சிறிதும் பிந்தாது. இதனை நீங்கள் அறிய வேண்டாமா? எனக் கூறினார்.

அம்மக்கள் (தூதரை விளித்து) நூஹே நிச்சயமாக நீர் எங்களுடன் தர்க்கித்தீர். அதுவும் அதிகமாகவே தர்க்கித்துவிட்டீர். நீர் உண்மை சொல்பவராக இருந்தால் (வீண்தர்க்கத்தை விட்டொழித்து) நீர் அச்சுறுத்தும் அந்த வேதனையை நம்மிடம் கொண்டு வாரும்.

தூதராகிய நூஹீவுக்கு மீண்டும் வந்த இறை அறிவிப்பின் தொடர் இவ்வாறு கூறிச் செல்கிறது.

(ஓ நூஹே) நாம் அறிவக்குமாறு நம் கண் முன்பாகவே ஒரு மரக்கலத்தை நீர் செய்யும். அக்கிரமக்காரர்களைப் பற்றி (இனிமேலும்) நீர் என்னுடன் பேசாதீர். நிச்சயமாக அவர்கள் பெரும் வெள்ளதில் மூழ்கடிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
அவர் மரக்கலத்தைச் செய்து கொண்டிருந்த சமயத்தில் அம்மக்களின் தலைவர்கள் அதன் சமீபமாகச் சென்ற போதெல்லாம் அவரைப் பரிகசித்தனர். அதற்கு அவர் நீங்கள் எங்களை (இப்பொழுது) பரிகசித்தால் நிச்சயமாக நீங்கள் நகைப்பது போலவே (விரைவில்) நாங்களும் உங்களைப் பார்த்துப் பரிகசிப்போம் எனக் கூறினார். ஆகவே அவர் தன் இறைவனை நோக்கி நிச்சயமாக நான் இவர்களிடம் தோற்றவிட்டேன். எனக்கு உதவி செய்வாயாக என்று பிரார்த்தனை செய்தார். ஆதலால் வானத்தின் வாயில்களைத் திறந்துவிட்டு தாரை தாரையாக மழை கொட்டும்படிச் செய்தோம்.

அன்றி பூமியின் ஊற்றுக்கண்களையும் (பீறிட்டு) பாய்ந்து ஒடச் செய்தோம். ஆகவே குறிபிட்ட ஓரளவுக்கு இரு ஜலங்களும் கலந்தன. நாம் அவரையும் அவரை ஏற்றுக்கொண்டவர்களையும் மரக்கலத்தின் மீது சுமந்து கொண்டோம். அது நம் கண் முன்னே பிரளயத்தின் மிதந்து சென்றது.

மேலும் அந்தப் பிரளயத்தினால் பூமியில் எத்தனை விதமான அழிவுகள் கொடூரமான முறையில் விவரிக்க முடியாத பயங்கரமாக இருந்தது என்பதை குர்ஆனின் இன்னொரு வசனம் பறைசாற்றுகிறது. அலைகள் சீறிவரும் போது அதிலிருந்து நெருப்புப் பிழம்பு வந்ததாகவும் ஒவ்வொரு நீர்த்திவலையும் கருங்குன்றுகள் போல் பூமியைத் தாக்கியதாகவும் இதனால் உயினங்கள் ஓலமிட்டு மரணவாயிலில் அடுக்கடுக்காக விழுந்ததாகவும் மலைகள் எல்லாம் எரிமலை சீற்றத்தால் வெடித்துச் சிதறுவது போல் தூள் தூளாக நொறுங்கி கடலில் கலந்ததாகவும் குர்ஆன் வர்ணனை செய்கிறது.
குர்ஆன் பைபிள் போலவே சிலப்பதிகாரமும் இந்த மகா ஊழிக் காலத்தை

பஃறுளியாற்றுடன்
பன்மலையடுக்கத்துக்
குமரிக்கோடும்
கொடுங்கடல் கொள்ள

என்று கூறுகிறது. அதாவது கடைச் சங்க காலத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குமரிக் கண்டத்தை (லெமுரியா) கடல் கொண்டபோது தற்போது இருக்கும் இமயமலையை விட பல மடங்கு பெரிதான குமரிக்கோடு என்ற மாமலையையும் அதிலிருந்து உற்பத்தியான குமரி ஆறு பஃறுளியாறு ஆகிய இரு நதிகளையும் கடல் கபளீகரம் செய்திருப்பதைத் தமிழ் பேரகராதி குமரி ஆறு என்ற தலைப்பின் கீழ் இவ்வாறு குறிப்பிடுகிறது.

இது தென்பாற் கண்ணதாகிய ஒராறு இதனையுள்ளிட்ட நாற்பத்தொன்பது நாடுகள் கடையூழி இறுதிக் காலத்தில் கடல் கொண்டழிந்து போயின. அதன் வடபால் நாடு பின்னர்க் குமரிநாடு என்றும் அக்கடல் குமரிப் பௌவ மென்றும் பழைய பெயரே பெற்று வழங்கப்படுவன வாயின

இப்படி உலகம் முழுவதும் உள்ள புராண இதிகாசங்களும் கர்ண பரம்பரை நம்பிக்கைகளும் ஜலப்பிரளயம் ஒன்று பூமியில் ஏற்பட்டு ஒரு கண்டத்தையே அழித்த விதத்தை பல கோணங்களில் வேறு வேறு வார்த்தைகளில் குறிப்பிட்டாலும் அவைகள் அனைத்தும் ஒரே விஷயத்தைத்தான் கூறுகின்றன என்பதை நம்மால் உணர முடிகிறது.

இப்படி பிரளயத்தப் பற்றிய ஒற்றுமைக் கூற்றுகள் உள்ளது போலவே சாவு அனுபவங்களைப் பற்றியும் ஒற்றுமையான கருத்துக்கள் தான் சொல்லப்பட்டுள்ளன. இந்தக் கூற்றுக்கள் எவற்றையும் அறிவியல் ஏற்றுக் கொள்ளாது மாறாக எள்ளிநகையாடும் என்று நமக்குத் தெரியும். ஆனால் உண்மைகள் எப்போதும் விஞ்ஞானத் தன்மை பெற்றதாக மட்டும்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனவே மரண அனுபவம் இப்படியும் இருக்கலாம் என நாம் நம்பலாம். இருப்பினும் இன்னும் சரியான முறையில் ஆய்வுகள் நடந்தால் பல உண்மைகளை மனிதகுலம் பெறலாம்...

நரக தண்டனைகளை நிச்சயிப்பது நாமே....

01. தாமிஸ்ரம் பிறருக்கு சொந்தமான பொருளை அகபரிப்பது குற்றமாகும் . பிறருக்கு சொந்தமான மற்றவர் மனைவியை விரும்புவதும் , அபகர...