Thursday, June 1, 2017

28. சில தர்மங்களும் தீட்டுக்களும்


திருமால் வேதவுருவனனான கருடனை நோக்கி, “கருடா!   நான் உனக்குச் சில தர்மங்களைச் சொல்லுகிறேன் கேள்!

கிருதாயுகத்தில் மாஹதவம் செய்வது மானிடர்க்கு உத்தமமானது.

திரேதாயுகத்தில் தியானஞ் செய்வது உத்தமமாக இருந்தது.

துவபாரயுகத்தில் யாகங்கள் செய்வது உத்தமமாக இருந்தது.

கலியுகத்தில் தானங்கள் செய்வதே உத்தமமாகும்.

இல்லறத்தில் இருப்பவனுக்கு எந்த யுகமானாலும் யாகாதி கர்மங்களை செய்வதும் கோயில், குளம், சத்திரம், தோட்டம் முதலியவற்றை உண்டாகி தருமஞ் செய்வதும் அதிதியாராதனம் செய்வதும் உத்தமமான செயல்களாகும்.

இல்லறத்தில் இருப்பவன், தன் தயாதிகளில் யாரேனும் இறந்துவிட்டால் அவரைக் குறித்து தர்ப்பணம் செய்வது அவசியம். இறந்தவன் அந்தப் புனலைப் பெற்று மகிழ்வான். இறந்த தினத்தின் மூன்றாம் நாளில் மூன்று சிறு கற்களைக் கயிற்றில் கட்டி இரவு நேரத்தில் எறிய வேண்டும்.

சஞ்சயனம் செய்த பிறகு தாயத்தார் அனைவரும் இறந்தவனுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டும். முதல் மூன்று வர்ணத்தாராகிய பிரம, ஷத்திரிய, வைசியருக்குச் சூத்திரன் தர்ப்பணம் செய்யலாம். பிரம, ஷக்திரியருக்கு வைசியன் தர்ப்பணம் செய்யலாம். ஷக்திரியன் பிராமணனுக்குத் தர்ப்பணம் செய்யலாம். பிராமணன் தன் மரபினருக்கள்ளாமல்  மற்ற குலத்தினருக்கு ஒன்றுமே செய்யலாகாது.

சூத்திரனுடைய சவத்தோடு பிராமணன் சுடுகாட்டுக்குச் சென்றால் அந்தப் பிராமணனுக்கு மூன்று நாட்கள் ஆசௌசம் உண்டு. மூன்று நாட்கள் கழித்து, அந்தப் பிராமணன் காவிரி போன்ற புனித நதியில் குளித்துத் தூய்மையாக வேண்டும்.

மாய்ந்தவனுக்குக் கர்மம் செய்பவன் யாராயினும் அவன் பஞ்சணையில் படுத்துறங்கக் கூடாது. இறந்தவனுடைய நல்ல குணங்களையே எடுத்துச் சொல்ல வேண்டும். எமனைக் குறித்து ஸ்தோத்திரம் செய்ய வேண்டும்.

இறந்தவனுக்கு, அவனைக் குறித்துப் போடப்படும் பிண்டங்கலாலேயே சரீரம் உண்டாகிறது. எனவே பத்து நாட் கிரியைகளையும் தவறாமல் முறைப்படிச் செய்வது அவசியம். பத்துநாள் கருமங்களைச் செய்யாவிட்டால், மாய்ந்தவன் சரீரம் பெற முடியாமல் வருந்துவான்.

தனுர் வேதமுணர்ந்த வல்லாளன் ஒருவன், குறி வைத்து அம்பை எய்தால், அந்த அம்பானது குறிதவறாமல் குறித்த இடத்தில் தைப்பது போல, கலைகள் உணர்த்த சற்புத்திரன் மரித்த தன் தாய் தந்தையர்க்குரிய கர்மங்களைச் செய்தால், அக்கர்ம பயன்கள் அவர்களைத் தவறாமல் சென்றடையும்.

மரித்த ஜீவன் மூன்றாவது நாள் நீரிலும், மூன்று நாட்கள் அக்கினியிலும், மூன்று நாட்கள் ஆகாயத்திலும், ஒரு நாள் தனது வீட்டிலும் ஆவியுருவில் வசிப்பான்.

முதல் நாளிலும், மூன்றாவது நாளிலும், ஐந்தாவது நாளிலும், ஏழாவது நாளிலும், ஒன்பதாவது நாளிலும், பதினொன்றாம் நாளிலும், நவகிரார்த்தம் செய்ய வேண்டும்.

முதல் நாளன்று, எந்த இடத்தில் தர்ப்பணம் முதலியவை செய்யப்பட்டனவ, அதே இடத்தில் மற்ற பத்து நாள் கிரியைகளையும் பத்து நாட்களிலும் செய்ய வேண்டும்.

பிரம, ஷத்திரிய, வைசிய, சூத்திரர்களில் எந்தக் குலத்தவருக்கு எத்தனை நாட்கள் ஆசௌசம் விதிக்கப்பட்டிருகிறதோ, அத்தனை நாட்களும் பிண்டத் தர்ப்பணம் செய்தல் வேண்டும். அது  அவசியமாகும்.

எந்த திதியில் ஒரு ஜீவன் மரிக்கிறானோ அந்த திதியில் மாசிகம் செய்தலும் அவசியம். பதினொன்றாம் நாள் பலகாரத்தோடு சோறு சமைத்து நாற்சந்தியில் கொட்டி ஸ்நானம் செய்ய வேண்டும்.

ஒருவன் அதிக வருத்தப்பட்டு இறந்து விட்டான் என்றால், அவனைக் குறித்து ஏகோதிஷ்ட சிரார்த்தம் சிறப்பாக செய்யப்படுமானால், அவன் வருத்தம் நீங்கி இன்பமடைவான்.

அந்த ஏகோதிஷ்ட சிரார்த்தத்தை சத்திரியன் பன்னிரெண்டாவது நாளிலும் வைசியன் பதினைந்தாவது நாளிலும் செய்ய வேண்டும்.

தாய் தந்தை மரித்தாலும் மகவு பிறந்தாலும் சூத்திரக் குலத்தாருக்கு ஒரு மாதம் வரையில் ஆசௌசம் உண்டு.
அரைமாதம் உண்டு என்று சொல்வாரும் உண்டு.

சூத்திரன் பதினைந்து நாட்களுக்குப் பிறகு ஏகோதிஷ்ட சிரார்த்தம் செய்ய வேண்டும். ஒருவன் இறந்தால், பத்து நாட்கள் தீட்டுடைய அவனுடைய தாயாதிக்காரன் கருமம் முடிந்த பிறகு மூன்று மாதங்களுக்குள்ளாக இறந்த செய்தியை எப்போது கேட்பினும் அத்தாயத்தானுக்கு மூன்று தினம் தீட்டு உண்டு. மூன்று மாதத்திற்குப் பிறகு ஆறு மாதங்களுக்குள்ளாக கேட்டாலும் ஒரு வருஷத்திற்குள் கேட்டால் ஒரு தினம் மட்டுமே தீட்டு உண்டு. ஒரு வருஷம் முடிந்த பிறகு கேட்டால் கேட்டவுடனேயே ஸ்நானம் மட்டும் செய்தல் போதும். இந்த விதி எல்லா வருணத்தாருக்கும் பொதுவாகும்.
         
வைனதேயா!   முன்பே சய்யாதானம் செய்ய வேண்டும் சொல்லியிருக்கிறேன். எந்தப் புருஷனும் அன்னதானத்தைத் தன் கையாலேயே செய்ய வேண்டும்.

நல்ல மரத்தில் கட்டில் செய்து சொர்ணத்தாலும், வெள்ளியாலும் பூண்கள் போட்டு முத்து மாலைகளாலும் மலர் மாலைகளாலும் அந்தக் கட்டிலை அலங்கரித்து பாயில் விரித்துத் தீபம், சந்தானம், புஷ்பம், தாம்பூலம் இவற்றுடன் நறுமணமுடைய மற்ற யாவும் நீருடன் செம்புத்தாலியும் அலங்காரத்திற்கும் லீலார்த்தமாகவும் ஸ்திரி புருஷர்களுக்கு வேண்டியவைகளை பூஜித்து, சிவன் முதலிய தேவர்களும், பார்வதி முதலிய தேவமங்கையரும், லட்சுமிநாரயணரும் இந்தச் சய்யானத்தால் திருப்தியடைய வேண்டும் என்று சொல்லி உபாத்தியாயனுக்குத் தானஞ் செய்து அவனை வலம் வந்து சேவிக்க வேண்டும்.” என்றருளினார்.

 

27. யமன் அரண்மனை, சித்திரகுப்தன் மண்டபம், பாவ அவஸ்தைகள்

ருடன் சிறிது யோசித்து மணிவண்ணப் பெருமானைத் தொழுது, “யமபுரி எங்குள்ளது? அங்கு செல்லும் மார்க்கம் எப்படிப்பட்டது என்பதை மீண்டும் எனக்கு விளக்கமாக கூற வேண்டும்.” என்று பிரார்த்தித்தார். திருமால் கருடனை நோக்கிக் கூறலானார்.

“மீண்டும் அதைப் பற்றிக் கேட்டதால் எஞ்சியவற்றை இப்போது சொல்கிறேன் கேட்பாயாக. யமபுரிக்கு செல்லும் வழியில் சிறிது தூரம் வரை செம்பை உருக்கி வார்த்தது போல் கனல் காந்திக் கொண்டிருக்கும். அதற்கப்பால் சிறிது தூரம் இண்டை முட்களாலும் தீக் கொள்ளிகளாலும் நிறைந்திருக்கும்.

“சிறிது தூரம் பொறுக்க முடியாத குளிர்ப்பிரதேசம் அமைந்திருக்கும். பூலோகத்திற்கும் எமலோகத்திற்க்கும் இடையே எண்பத்தாறாயிரம் காத வழி உள்ளது என்று முன்னமே உனக்குச் சொல்லி இருக்கிறேன். அத்தனை காதவழியிலும் பாபஞ் செய்த ஜீவனுக்கு அந்த வழி நெடுகிலும் மரத்தின் நிழலும் பருகுவதர்க்குத் தண்ணீரும் சிறிதளவு கூடக் கிடைக்காது. பாபிகளுக்கு யமலோகமும் அங்குச் செல்லும் மார்க்கமும் மிகவும் கொடுமையாக இருக்கும்.

“கருடா! இனி யம லோகத்தின் தன்மையைச் சொல்லுகிறேன், கேட்பாயாக! தென் திசைக்கும் நிருதியின் திசைக்கும் நடு மையத்தில் யமபுரியானது வஜ்ஜுர மயமாயும் தேவர்கள் அசுரர்கள் ஆகிய இருதரத்தாலும் சிதைக்கத் தகாததாயும் அமைந்திருக்கும்.

“அந்தப் பட்டினத்திற்கு நடுவில் சதுரமாய் நூறு யோசனை உயரமுள்ளதாயும் அநேகஞ் சாளரங்களைக் கொண்டதாயும், துகிர்க் கொடிகள், முத்துக் கோவைகள், தூரங்கள் இவற்றால் அலங்கரிக்கப் பெற்றதாயும் சுவர்ணமயமாகவும் எமதர்மராஜனின் அரண்மனை அமைந்திருக்கும்.

“அந்த அரண்மனையின் உள்ளே பத்து யோசனை அகல நீளமுள்ள அநேகமாயிரம் வைரத்தாலான தூண்கள் நிறுத்திய மண்டபமும் மாளிகையும் அமைந்திருக்கும்.

“அங்கு சைத்திய சௌரப்பியமான மென்காற்று இயங்குவதாயும் எப்போதும் ஆடலும் பாடலும் இடைவிடாமல் புழங்கும் ஒரு திவ்விய மண்டபம் இருக்கும்.

“அந்த மண்டபத்தில் யமதூதர்கள் கரங்குவித்த வண்ணம் ஒருபுறம் நின்று கொண்டிருப்பார்கள். ரோகங்கள் எல்லாம் கோர உருவத்துடன் நின்று கொண்டிருக்கும். அவர்களுக்கு நடுவில் கண்டவர்கள் அஞ்சும்படியான ரூபத்தோடு மகிழ்ச்சியாக யமதர்மன் வீற்றிருப்பான்.

“அவன் வீற்றிருக்கும் மண்டபத்திற்கு அருகில் இருபத்தைந்து யோசனை அகல நீலமுள்ளதாகவும், பத்து யோசனை உயரமுள்ளதாகவும் பலவித அலங்காரங்களால் அழகு செய்யப்பட சித்திரகுப்தனுடைய அரண்மனை இருக்கிறது.

“அந்த அரண்மனையில் ஒரு திவ்விய மண்டப்பத்தில் சித்திர குப்தன் வீற்றிருப்பான். அவன் சகல ஜீவன்களும் செய்யும் பாவபுண்ணியங்களை ஒன்று விடாமல் கணக்கு எழுதிக் கொண்டிருப்பான்.

“அவன் எழுதும் கணக்கில் ஒரு சிறு பிழையும் உண்டாகாது. அந்த சித்திரகுப்தனுடைய அரண்மனைக்குக் கிழக்குத் திசையில் ஜுரத்துக்கும், தென்திசையில் சூலைநோயோடு வைசூரி நோய்க்கும், மேற்குப் பக்கத்தில் காலபாசத்தொடு கூடிய அஜீரணத்துக்கும் அருசிக்கும், வடக்குப் பக்கத்தில் வயிற்று வலிக்கும், தென் கிழக்கில் மயக்கத்துக்கும் தென் மேற்கில் அதிசார நோய்க்கும், வடமேற்கில் ஜென்னிக்கும் தனித்தனியே கிரகங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

“அவ்ரோகங்கள் யாவும் யமனுடைய உத்திரவை எதிர்பார்த்துக் கொண்டே அம்மனைகளில் வசித்திருக்கும்.

“கருடா! யமனுடைய அரண்மனைக்குத் தென்திசையில் பாபஞ் செய்த சேதனர்கள் யமகிங்கரர்கள் பற்பலவிதமாக ஹிம்சை செய்வார்கள்.

“சிலஜீவர்களை உலக்கைகளால் நையப்புடைப்பார்கள். சிலரைக் கரிய கொடிய ஆயுதங்களால் சிதைக்கிறார்கள். சிலரைச் சூரிகையால் சீவுகிறார்கள். சிலரை செக்கிலிட்டு வதைக்கிறார்கள். சிலரை இரும்புச் சலாகையில் கோர்த்து பெருந்தலனில் வாட்டுகிறார்கள்.

“இன்னுஞ் சிலரை அக்கினிக் குண்டத்தில் வேக வைக்கிறார்கள். வைனதேயா! அங்கு செம்பினால் செய்யப்பட ஆண்பாவைகளும் பெண்பாவைகளும் அக்கினியில் சூடேற்றப்பட்டு தகத்தகாயமாய் தகித்துக் கொண்டிருக்கினறன.

“பரஸ்திரிகளை கூடி மகிழ்ந்த ஜீவர்களை யமதூதர்கள் பார்த்து, ‘பாவிகளே! தருமமும், மானமும் பாராமல் பிறன் மனைவியரைப் புணர்ந்த இன்பம் பூவுலகத்தில், இவ்வுலகத்தில் மாற்றான் பட்ட மனத்துன்பமே இப்போது நீங்கள் அனுபவக்க நேரிட்ட பயனாகும். அந்தப் பயன் இதுவேதான்!’ என்று அதட்டிச் சொல்லி, நெருப்பெனக் கொதிக்கும் பெண்பதுமையோடு, பாவிகளை ஒன்று சேர்ப்பார்கள்.

“பரபுருஷோடு சேர்ந்த மங்கையரை தகிக்கின்ற ஆண் பதுமையோடு அங்ஙனமே ஒன்று சேர்ப்பார்கள். வினுதையின் மைந்தனே! புருஷனானவன் தன் மனைவியைத் தவிர பரஸ்திரியை கூடிக் கலந்ததிற்கும், ஸ்திரியானவள் தனது கணவரையன்றி பரபுருஷனைக் கூடியதற்கும், யமலோகத்தில் விதிக்கப்படும் தண்டனையைப் பார்! இத்தகைய கொடிய தண்டனை உள்ளதாக இருந்தும் ஸ்திரி புருஷர்களில் நல்லொழுக்கத்தில் நிற்ப்பவர்களை பூவுலகில் காண்பதற்கே அரிதாகி விடுகிறது.

“யமபுரியில் சில பாவிகளைக் கரும்புகளை கரும்பாலையில் சக்க வைத்து கசக்கி சாறு பிழிவதைப் போல ஆலையில் கொடுத்து வதைக்கிறார்கள். சிலரை நரகங்களில் தள்ளி அடியாழம் வரையிலும் அழுத்துகிறார்கள்.

“கடன் வாங்கிக் கொண்டு திருப்பிக் கொடுக்காதவர்களை யமகிங்கரர்கள் அழைத்துச் சென்று கடன்கொடுத்தவனுக்கு அதை திருப்பிக் கொடுப்பதை விட்டு அவனிடம் வன்கண்மை பேசினீர்களே! என்று முனிந்து நையப்புடைக்கிறார்கள்.

“பாவிகள் படுகின்ற துயர்களை விளக்கிச் சொல்வதால் பயன் என்ன? இன்னவன் அறநெறியாளன், இன்னவன் அதகுமிஷ்டன், இன்னவன் சுவர்க்கம் புக வேண்டியவன், இன்னவன் நரகம் செல்ல வேண்டியவன் என்பதை அவரவர் ஒழுக்கத்தைக் கொண்டே உணரலாம்.

“தர்மம் செய்தவனே சுவர்க்கம் புகுவான் என்பது நிச்சயம். ஆகையால் யாவரும் தர்மநெறியிலேயே வாழ்ந்து தருமஞ் செய்வதே வாழ்வுக்கும் பரலோக வாழ்வுக்கும் நல்லது.

26. உடலியல் பற்றிய விளக்கங்கள்

“வைனதேயா! பஞ்ச பூதாத்மகமாகிய தேகமானது, பஞ்ச இந்திரியங்களை அடைத்து, பத்து நாடிகளில் அலங்கரிக்கப்பட்டு பிராண, அபான , வியான, உதாசன, சமான, நாக, கூர்ம, கிறுக, தேவதத்த, தனஞ்செயன் என்ற தச வித வாயக்களோடு சேர்ந்துள்ளது. மேலும் அந்த சரீரம், சுக்கிலம், எலும்பு, நீர், ரோமம், இரத்தம் என்ற ஆறு கோஷங்களுடனும் அமைந்துள்ளது. நரம்புகளால் கட்டப்பட்டிருக்கும் ஸ்தூல சரீரத்தில் (பருவுடலில்) “தோலும் எலும்பும் மயிரும், மாமிசமும், நகமும் பிரித்திவியின் (மண்ணின்) குணத்தால் உருவாகின்றன. பசி, தாகம், நித்திரை, சோம்பல், சாந்தி முதலியவை தேயுவின் (நெருப்பின்) குணமாகின்றன.

“இச்சை, கோபம், நாணம், பயம், மோகம், இயக்கம், சுழலுதல், ஓடுதல், கைகால்களை மடக்கி நீட்டுதல், ஒரு வினையும் செய்யாமலேயே இருத்தல் ஆகிய அனைத்தும் வாயுவின் (காற்றின்) குணமாகும்.

“சப்தம், எண்ணம், கேள்வி, காம்பீர்யம், சக்தி ஆகியவை ஆகாயத்தின் குணமாகும். காதுகள், கண்கள், மூக்கு, நாவு, தொக்கு ஆகிய ஐந்தும் ஞாநேந்திரியங்களாகும்.

“இடைபிங்கனல் மற்றும் சுழிமுனை என்ற மூன்றும் முக்கியமான பெரிய நாடிகளும், காந்தாரி, கஜ்சிம்மஹி, பூழை, யச்சு, அலாபு, குரு, விசாதினி என்ற ஏழு நாடிகளும், சரீரத்தின் மிக முக்கியமான பெரிய நாடிகளாகும்.

“ஜீவன் உண்ணுகிற சாறு முதலியவற்றை மேல சொன்ன வாயுவே, அந்ததந்த இடத்தைச் சேரும்படிச் செய்கிறது. வயிற்றில் அக்கினிக்கு மேல் தண்ணீரும், அந்தப் புனலுக்கு மேல் அன்னமும் உள்ளன. அந்த அக்கினியை வாயுவானது ஊதி விருத்தி செய்கிறது.

“சரீர முழுவதும் மூன்றரைக் கோடிக்கு மேற்பட்ட ரோமங்களும், முப்பத்தியிரண்டு பற்களும், இருபது நகங்களும், இருபத்தேழு கோடி கூந்தல் மயிர்களும் ஆயிரம் பலம் இறைச்சியும், நூறு பலம் இரத்தமும், பத்துப் பலம் மேதசும், பத்துப் பலம் தொக்கும், பன்னிரண்டு பலம் மஜ்ஜையும், மூன்று பலம் முக்கிய இரத்தமும், கபமும், மலமும், மூத்திரமும் முடிவாக அமைந்துள்ளன.

“அண்டத்திலுள்ள யெல்லாமே மனித தேகத்திலும் இருக்கின்றன. உள்ளங்காலை அதலலோகம் என்றும் , கணுக்காலை விதலம் என்றும், முழங்காலை சுதலம் என்றும், அதற்க்கு மேற்ப்பட்ட பகுதி நிதலம் என்றும் ஊறு, தராதலம் என்றும், குஷ்யந்தை ரசாதலம் என்றும், இடையைப் பாதளம் என்றும், நாபியை பூலோகம் என்றும், இதயத்தை சுவர்க்கலோகமென்றும், தோளை மகாலோகமேன்றும், முகத்தை ஜனலோகமென்றும், சிரசை சத்தியலோகமென்றும் சொல்லுகிறார்கள்.

"திரிகோணத்தை மேருகிரியென்றும், கீழ்க்கோணத்தை மந்தரபருவதம் என்றும், அந்த கோணத்துக்கு வலதுபுறம் கைலாயம் என்றும் இடதுபுறம் ஹிமாசலம் என்றும் தென்பாகம் கந்தமாதன் பர்வதம் என்றும், இடது உள்ளங்கையுலுள்ள ரேகை வருணபர்வதம் என்றும் வழங்கப்படும். எலும்பு நாவலந் தீவு என்றும், மேதசு, சரதகத் தீவு என்றும், தசை சூசைத் தீவு என்றும், நரம்பு கிரௌஞ்ச்சத் தீவு என்றும், தொக்குசான் மளித் தீவு என்றும், ரோமத்திரல் பிலட்சத் தீவு என்றும், நீர்பாற்க்கடல் என்றும், கபம் சுராசித்து என்றும், மஜ்ஜை நெய்க்கடல் என்றும், வாய் நீர் கறுப்பஞ்சாற்றுக் கடல் என்றும், இரத்தம் தயிர்க்கடல் என்றும், வாயில் உண்டாகும் இனிய புனல், சந்தோதக சிந்து என்றும் வழங்கப்படும்.

“சரீரத்தில் இரண்டு சக்கரங்கள் உள்ளன. அவற்றில் நாத சக்கரத்தில் சூரியனும், பிந்து சக்கரத்தில் சந்திரனும் நேத்திரங்களில் அங்காரகனும், இதயத்தில் புதனும், வாக்கில் தேவ குருவும், சுக்கிலத்தில் அசுர குரு சுக்கிரனும், நாபியில் சனியும், முகத்தில் ராகுவும், காலில் கேதுவும் உள்ளனர்.

“மனித உடலில் பதினான்கு உலகங்களும் சப்த குலாசலங்களும் தீவுகளும் நவகிரகங்களும் இருக்கும் வகையை மேலே சொன்னேன்.

“ஜீவன் கர்ப்ப வாசம் செய்யும் போது தானே, அந்த ஜீவனுக்கு ஆயுள் இவ்வளவு தான் என்றும், இன்ன வித்தை இவ்வளவு தான் என்றும் கோபம், யோகமும், போகமும் இவ்வளவுதான் என்றும், இன்ன சமயத்தில் இன்னவிதமான மரணமுண்டாகத் தக்கது என்றும், பூர்வ கர்மானுசாரத்தை அனுசரித்து, பிரம்மன் விதித்து நிச்சயித்து விடுகிறான்.

“ஆகையால் தீர்க்க ஆயுளும் உயர்ந்த வித்தையும் போகமும், யோகமும் - மற்ற யாவுமே ஜென்மத்திலாவது ஒருங்கே அடைவதற்காகவாவது, ஒரு ஜீவன் நற்கர்மங்களைச் செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்கள் அறிவித்துள்ளன.

“ஜீவன் தன பூர்வஜென்மத்தில் செய்த கர்மவினைப் பயனையே மறு ஜென்மத்தில் அடைகிறான் என்பதில் ஒரு சிறு சந்தேகமும் வேண்டியதில்லை. கருடா! இவை அனைத்தையும் உலக நன்மையைக் கருதிக் கூறுகிறேன். இனி கேட்க வேண்டியது எதுவாயிருந்தால், அதையும் கேட்கலாம்.” என்று திருமால் திருவாய் மலர்ந்தருளினார்.

25. தானச் சிறப்பும் உயிர் பிரியும் விதமும்

ஸ்ரீமந்நாராயணர், கருடனை நோக்கி, “வைனதேயா! என்னை ஆராதித்து எனது புண்ணிய ஷேத்திரங்களில் தான தருமஞ் செய்பவன் புண்ணியங்களை அதிகமாக அடைவான்.

“ஐப்பசி, கார்த்திகை, மாசி ஆகிய மூன்று மாதங்களிலாவது சதுர்த்தியிலாவது, பௌர்ணமியலாவது ஒருவன் இறந்த தினத்திலாவது தீபதானம் செய்வது சிறப்பாகும். பிரமால்யத்திலும், தேவாலயத்திலும் வடக்கு, கிழக்கு முகத்தில் தீபம் வைக்க வேண்டும். தீபதானம் செய்பவன் தனக்கு எதிர்முகமாக தீபத்தைச் சுடர்விட்டேறியச் செய்து கொடுக்க வேண்டும்.
       
“மனிதனாக பிறந்த ஒருவன், என்றாவது ஒருநாள் இறந்தே தீர வேண்டும் என்பதை உணர்ந்தவன். தானங்களைத் தனக்குத் தானே செய்து கொள்ள வேண்டும்.

“ஆசனப் பலகையையும், செப்புத் தாலியையும் பொருள்களையும் தானம் செய்தவன், மரித்த பிறகு ஆகாய மார்க்கமாகவே இனிதாக எமலோகம் செல்வான்.

“அரிசியும், எள்ளும், பதின்மூன்று கடகமும், மோதிரமும் குடையும், விசிறியும்,  பாத ரஷயையும் அவசியமாக தானம் செய்ய வேண்டும்.

“வெற்றிலை,  பாக்கு, புஷ்பம் ஆகியவற்றைத் தானம் செய்தால் யமதூதர்கள் மகிழ்ச்சியடைந்து ஜீவனை வருந்தச் செய்ய மாட்டார்கள்.

“ஆடைகளைத் தானம் செய்தால், கார்மேகம் போன்று கருத்த மேனியும், பிறை போன்ற கடைவாய்ப் பற்களும், செம்பட்டை ரோமமும், அச்சம் தரும் பயங்கர உருவமும் கொண்ட யமதூதர்கள் ஜீவனின் முன்பு நல்ல உருவத்துடன் தோன்றுவார்கள்.” என்றருளிச் செய்தார்.

கருடன் அவரை நோக்கி, “ஸ்ரீ ஹரியே! அடியார்க்கெளிய ஆபத்பாந்தவரே! மனிதனின் சரீரத்திலிருந்து உயிரானது எப்படி நீங்குகிறது? இதை திருவாய் மலர்ந்தருள வேண்டும்.” என்று கேட்க பகவான் கூறலானார்.
                 

“கருடா! உயிரானது மனிதனது சரீரத்தை விட்டு விலகும் பொது கண் வழியாகவோ, நாசி வழியாகவோ, ரோமக்கால்கள் துவாரங்கள் வழியாகவோ,  நீங்கி விடும். ஞானிகளுக்கு கபாலம் விரிந்து உயிர் நீங்கும். உயிர் நீங்கியதும் மனித உடல் கட்டைப் போல கிடக்கும்.

“பிறகு அந்த உடல் பஞ்சபூதாத்மகம் ஆகலாம். உடல்கூறுகள் பஞ்சபூதத்தால் ஆனவை. ஆகையால் ப்ரித்வி என்ற மண்ணிலும், அப்பு என்ற புனலிலும், தேயும் என்ற அக்கினியிலும், வாயு என்ற காற்றிலும் ஆகாயம் என்ற வானத்திலும் லயமாகி விடும்.

‘காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியமாகிய ஆறும், காமேந்திரியம் ஐந்தும், ஞானேந்திரியம் ஐந்தும், மனித சரீரத்தில் திருடர்கள் போலப் பதுங்கி ஒளிந்து, ஒன்றோடொன்று உறைந்து இருப்பான்.

“உயிரானது நீங்கும் பொது அவையனைத்தும் மனத்தோடு ஒன்றாகும். சேதனனானவன் தனது கர்மத்தாலேயே மறுபிறவியை அடைகிறான். பழைய வீட்டில் வசிப்பவன் பொருள் சம்பாதித்து நல்லதொரு புதிய வீடு கட்டிக் கொண்டு அதில் குடிஏறுவதைப் போலவே புண்ணியஞ் செய்த ஜீவன், தன் வாழ்நாள் முடிந்த பிறகு இந்திரியங்கள் ஐந்தும் அமைந்த ஒரு திவ்விய தேசத்தில் அவன் குடியேறுவான்.

“மலமூத்திரங்களும், பயன்தராத கற்பனைகளும், ஊனும் நரம்பும் எலும்பும் மெய்யோடு நசிக்கப்பட்டோ,  எரிக்கப்பட்டோ நாசமடைந்து விடுவதே மனித உடலாகும்.

“ஒ, கருடா! மனிதன் மரிக்கும் விதம் இதுவேயாகும். இனி,  மனிதன் இறந்த பிறகு மீண்டும் பிறக்கும் விதத்தினை சொல்கிறேன் கேட்பாயாக!
                     
“பல நரம்புகளோடு துணைப் போல் ஒரு பெரிய நரம்பைக் கொண்டதும் இந்திரியங்கள் பொருந்தியதும் காமக்குரோத லோப மோக மதமார் சரியமாகிய உட்பகைகளுடன் கூடியதும்,காம குரோத இச்சை துவேஷங்களால் வியாபிக்கப் பெற்றதும் மாயையோடு கூடியதுமான தேகம், எல்லாப் பிராணிகளுக்கும் உறுதியாய் உளதாகும். சமஸ்த லோகங்களுக்கும் உரிய சமஸ்த தேவர்களும் தேகத்திலேயே இருக்கிறார்கள்” என்று கூறியருளினார்.

24. பலவகை தானங்கள்

திருமால் திருவாய் மலர்ந்து கூறலானார். “கருடா, தானங்களைச் செய்யும் முறைகளையும் அத்தானங்களால் ஏற்படும் பயன்களையும் கூறுகிறேன் கேள்.

“தானங்கள் யாவற்றிலும் பருத்தி தானமே மிகவும் சிறந்தது. அந்தப் பருத்தி தானமே மகர்தானம் என்ற பெயரைப் பெற்றது. அறப்படி வாழ்ந்து அறங்களையே புகன்று, நான்கு வேதங்களையும் நன்றாக அறிந்த அந்தணர்கள் பூணுகின்ற பூணூலுக்குப் பருத்தியே ஏதுவானது.

“சகல ஜீவன்களும் உலகில் வாழ்கின்ற காலத்தில் பருத்தியே பயனாவதால் அது மிகவும் சிறப்புடையதாகும். பருத்தித் தானம் செய்தால்,  மாமுனிவர்களும் பிரம ருத்திர இந்திராதி தேவர்களும் திருப்தியடைவார்கள். பருத்தி தானம் செய்தவன் வாழ்நாள் முடிந்த காலத்தில், சிவலோகத்தையடைந்து, அங்கேயே வாசஞ் செய்து, பிறகு சகலகுண சம்பன்னனாய் அழகிய மேனியையுடயவனாய், மகாபலசாலியாய், தீர்க்காயுள் உடையவனாய் மீண்டும் பூமியில் பிறந்து யாவரும் போற்றிப்புகழ  நெடுங்காலம் வாழ்ந்து சுவர்க்கலோகத்தையடைவான். தானங்கள் செய்வதற்கு சிறந்த காலம்,  ஜீவன் மரிக்கும் காலத்தில் செய்வதேயாகும்.

“ஒ வைனதேயா! எந்த மனிதனும் தான் இன்பமாயும் மகிழ்ச்சியாயும் வாழுங்காலத்திலேயே தனக்கான தான கருமங்களைச் செய்து கொள்வது நல்லது. எள்ளையும், இரும்பையும் தானம் செய்தால் யமதர்மன் மகிழ்சியடைவான்.

“பருத்தித் தானத்தை செய்தால் யம தூதர்களிடத்தில் பயம் உண்டாகாது. தானியங்களைத் தானம் செய்தால், கூற்றவனும் அவனது தூதர்களும் மகிழ்ந்து,  ஜீவனுக்கு வேண்டியவற்றையெல்லாம் வழங்குவார்கள்.

“மரணமடையும் நிலைமை அடைந்தவன், நம்மையே தியானித்து, நமது திருநாமங்களையே உச்சரிப்பானாகில் இன்ப வீடாகிய நமது வைகுண்டலோகத்தை அடைவான்.

“கயா சிரார்த்தம் செய்வதை விட தந்தை-தாய் இறக்கும் சமயத்தில் அவன் தன் தாய் தந்தை அருகிலேயே இருந்து தொண்டு செய்வதே உத்தமமாகும்.

“கூடாரமும் முசலமும் சூரிகையும் இரும்புத் தண்டமும் காலனுக்கு ஆயுதங்களாம். அந்த ஆயுதங்கள் இரும்பாலானததால்  மரிக்கும் காலத்தில் இரும்பைத் தானம் செய்தால் யமன் மகிழ்வான். யமதூதர்கள் அஞ்சுவார்கள், காண்டாமிருகன், ஔதும்பரன், சம்பரன், சார்த்தூலன் முதலிய யமதூதர்கள் திருப்தி யடைவார்கள்.
   
“வைனதேயா!  ஜீவனுடைய அங்கங்களாகிய கால் முதல் தலை வரையிலுள்ள உறுப்புகளில் பிரம்மருத்திர இந்திரராதி தேவர்களும் ஸ்ரீ கிருஷ்ண பகவானும் இருக்கிறார்கள். தாயும் தந்தையும் குருவும் சுற்றமும் ஜீவர்களுக்கு ஸ்ரீ விஷ்ணுவேயின்றி மற்றோருவருமில்லை.

“சர்வம் விஷ்ணு மயம் என்ற ஜகத் அருள்வாக்கை நீயும் உணர்ந்திருக்கிறாய் அல்லவா? நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சுவர்ணம், தானியம், தேன், நெய், பசு, யாகம், அந்தணர், அஜசங்கர, இந்திராதி தேவர்கள் ஒன்றைக் கொடுப்பவனும், வாங்குபவனும் பிறகு யாவரும் யாமேயின்றி வேறொன்றுமில்லை.

“ஜீவர்கள் பூர்வத்தில் செய்த தர்மத்தை நாமே நாடச் செய்கிறோம். புண்ணியம் செய்தவன் சுவர்க்கம் அடைவான். பாவம் செய்தவன் நரகத்தை அடைவான்.”

23. எள் , தருப்பை முதலியன பற்றி

ருடன், திருமாலைப் பணித்து, “சர்வேசா! தாங்கள் இதுவரை கூறிய விசயங்களை மிகவும் சுருக்கமாக சொல்லிவிட்டீர்கள். கருமங்களைச் செய்யும் போது கருமஞ் செய்ய வேண்டிய ஸ்தலத்தை கோமியத்தால் ஏன் மெழுக வேண்டும். பிதுர்களுக்குரிய கர்மங்களைச் செய்யும் போது மட்டும் எள்ளையும்,  தர்ப்பைப் புற்களையும் உபயோகிப்பதேன்?

“கட்டிலில் படுதுறங்கியபடியே இறந்தவர்கள் நற்கதியடைய மாட்டார்கள். அப்படியானால் இறக்கும் நிலையை அடைந்தவன் எந்த இடத்தில் எப்படி இறத்தல் வேண்டும்? தானங்களை யெல்லாம் எப்படிச் செய்தல் வேண்டும். இவற்றையெல்லாம் அடியேனுக்குத் தெளிவாகவும் விளக்கமாகவும் கூறியருள வேண்டும்.” என்று பிரார்த்தித்தார். உடனே புருஷோத்தமன் கருடனை நோக்கிக் கூறலானார்:

“வைனதேயா! நல்ல கேள்வி! சொல்கிறேன். நீயும் கவனமாக கேட்பாயாக. புத்திரனைப் பெறாதவனுக்கு எந்த உலகத்திலும் இன்பமில்லை. தர்மமும் தவமும் செய்யவில்லை என்றால் அவனது மனைவியின் வயிற்றில் கர்ப்பம் தரிக்காது. அப்படியே தரித்தாலும் அது பத்து மாதம் நிரம்புவதற்கு முன்னாலேயே கரைந்து,  கழிந்து போகும்.

“கருவானது கரைந்து சிதைந்தால் புருஷனுக்கு நற்கதி கிடைக்காது. நன்மைகனைப் பெற்றவனே எல்லா உலகங்களிலும் நன்மையை அடைவான்.

“கருமங்களைச் செய்யத் துவங்குவதற்கு முன்னாலேயே ஒரு குறிப்பிட்ட ஸ்தலத்தில் திருவலக்கால் துடைத்து சுத்தம் செய்து, கோமியத்தால் நன்றாக மெழுகிய பிறகே, எந்தக் கர்மத்தையும் செய்ய வேண்டும்.

“சுத்தம் செய்யாமல் செய்தால், அரக்கரும், பூதங்களும், பிரேதங்களும், பைசாசங்களும், அங்கு செய்யவிடாமல் அக்கர்மங்களை முற்றுப்பெறாதவாறும் தடுத்து நிறுத்தி விடும்.

“சுத்தம் செய்த ஸ்தலத்தில் கருமம் செய்தால் தேவர்கள் அங்கு வந்து அக்கருமங்களை நிறைவேறச் செய்வார்கள். தூய்மை செய்யாதிடத்தில் கர்மம் செய்தால் பயனை இறந்தவன் அடைய முடியாமற் போவதோடு, இறந்தவன் நரகத்தை அடைய நேரிடும்.
     
“எள் என்பது எனது வியர்வையிலிருந்து தோன்றியதாகையால் அந்தத் தானியம் மிகவும் பரிசுத்தமானதாகும். அந்த எள் இருவகைப்படும். கருப்பு எள், வெள்ளை எள் என்ற இரு வகையில் எந்த நிறமுள்ள எள்ளையேனும் தானங்களோடு சேர்த்துக் கொடுத்தால் அதிகப் பயன் உண்டாகும். சிரார்த்த காலத்தில் கருப்பு எள்ளைச் சேர்த்தால் பிதுர்த் தேவர்கள் மிகவும் திருப்தியடைவார்கள்.

“சூசைப் புல்லாகிய தர்ப்பைப்புள், ஆதியில் ஆகாயத்தில் உண்டாயிற்று. அந்தத் தருப்பையின் இருகடையிலும் பிரமனும் சிவனும் அதன் நடுவே ஸ்ரீ ஹரியும் வாசஞ் செய்கின்றனர். தர்ப்பை இல்லாமல் சிரார்த்தம் எதுவும் செய்யலாகாது. பிராமணருக்கும், மந்திரத்திற்கும் தர்ப்பைக்கும், அக்கினிக்கும், திருத்துழாயக்கும்  (துளசி)  நிர்மாலிய தோஷமில்லை. ஆகையால் பயன்படுத்திய தர்ப்பைப் புல்லையே மீண்டும் உபயோகப்படுத்தலாம்.
             
“ஏகாதசி விரதமும், திருத்துழாயாகிய துளசியும், பகவத் கீதையும், பசுவும் பிராமண சக்தியும், ஸ்ரீ ஹரியின் சரனுமும் ஆகிய இவையனைத்தும் சம்சார சாகரத்தை கடக்க வேண்டியவருக்கு நல்ல தெப்பமாகும்.

“இறக்கும் நிலையை அடைந்தவன் கோமயத்தில் நன்றாக மெழுகப்பட்ட ஸ்தலத்தில் சூசைப் புல்லை பரப்பி, அதன் மீது எள்ளை இறைத்து, அந்தத் தர்ப்பைப் புல்லனையின் மீது சயனித்து, தருப்பைப் புல்லையும் துளசியையும் கையில் ஏந்தி, எனது நாமங்களை வாயார புகழ்ந்த வண்ணம் மடிவாநாகில், அயனரனாதியருக்கும் அரிதாகிய நிரதிசிய இன்பவீடாகிய நமது உலகத்தை வந்தடைவான்.

“மாய்ப்பவன் தர்ப்ப சயனத்தில் குப்புறப்படுத்தலாகாது. முதுகு கீழறவே சயனஞ் செய்தல் வேண்டும். உயிர் நீங்கும் முன்பே திருத்துழாயோடு, தனது நல்லுலக வாழ்வைக் கருதி தானங்களை எல்லாம் கொடுத்து விட வேண்டும். அவற்றில் உப்பை தானம் செய்வது மிகவும் சிறப்பாகும். உப்பானது, விஷ்ணு லோகத்தில் உண்டானதாகும். ஆகையால் அதற்கு மகிமை அதிகம். மரித்தவன் உப்பைத் தானம் செய்வதால் சுவர்க்கலோகத்தை அடைவான்.” என்றார் திருமால்.

22. பக்ருவாகனன் கருமம் செய்தல்

ருடன், பரமபதியை தொழுது பரமபுருஷா! “இதற்கு முன்பு பிரேத ஜென்மம் அடைந்தவனைக் குறித்த சரித்திரம் ஏதாவது உள்ளதா?    அத்தகைய சரித்திரமிருந்தால், அதைச் சொல்லியருள வேண்டும்.” என்று வேண்டினார்.
         
ஸ்ரீமந் நாராயண பகவான், கருடனை நோக்கி கூறலானார்:

“வைனதேயனே! நீ இப்போது கேட்ட கேள்வி நல்லதொரு கேள்வியாகும். இதற்கு ஒரு கதை உள்ளது. கவனமாகக் கேள்” என்றார்.

திரேதாயுகத்தில் பக்ருவாகணன் என்ற அரசன் இருந்தான். அவன் தன் நித்தியகர்மங்களை நியமனந் தவறாமல் செய்து வந்தான். பெரியோர்களால் கொண்டாடப்பட்ட அவன் மகோதயம் என்ற நகரத்திலிருந்து உலகத்தை ஆண்டு வந்தான்.

அவன் ஒரு நாள் வேட்டையாட விரும்பி, தன் படை வீரர்கள் சிலருடன் காட்டுக்குச் சென்று வேட்டையாடினான். அப்போது அவன் பார்வையில் புள்ளிமான் ஒன்று தென்பட்டு, அந்த மான் மீது அம்பெய்தான். அடிப்பட்ட அந்த மான் கீழே விழுந்து எழுந்து ஓடிற்று.

மறுபடியும் அம்மான் மீது அம்பெய்தான். அந்த அம்பு குறி  தவறாமல் அந்த மான் மீது பாய்ந்தது. அம்பு பாய்ந்த புண்ணிலிருந்து வழிந்து ஒழுகிய ரத்தமானது சிதறியது. அந்த மான் மீண்டும் ஓடி எங்கோ மறைந்தது.

அரசன் மானின் உடலிலிருந்து தரையில் விழுந்திருந்த ரத்த சுவட்டைப் பின்பற்றிச் சென்று, நெடுந் தூரம் நடந்து, வேறு ஒரு வனத்தையடைந்தான். அங்கும் அந்த புள்ளிமான் காணாததாலும், நெடுவழி நடந்த சோர்வாலும் மிகவும் சோர்வடைந்தான்.

அரசனுக்கு பசியை, விடத் தாகம் நெஞ்சை வறளச் செய்தது. தண்ணீருக்காக அந்த வனம் முழுவதும் ஒரு தடாகத்தை தேடியலைந்து, ஒரு தாமரைப் பொய்கையைக் கண்டு அதனுள்ளிறங்கி, நீராடி, புனல் பருகிக் களைப்பு நீங்கினான்.

அங்கிருந்த ஆலமரம் ஒன்றின் கீழ் அமர்ந்து, தன்னுடன் வேட்டையாட வந்தவர்களுக்காக காத்திருந்தான். நெடுநேரமாகி அந்திமங்கியது. இருள் கவிந்தது.
                                         
அப்போது எலும்பும், நரம்பும், தசையும் இல்லாத பிரேதம், பல பிரேதங்களோடு பயங்கரமாக கூச்சலிடுவதை கண்ட அரசன் பயமும், அதிர்ச்சியும், வியப்பும் அடைந்தான்.

அந்த பிரேத ஜென்மம், அரசனிடம் நெருங்கி வந்து, “அரசனே!  உன்னைக் காணப் பெற்றதால், இந்தப் பிரேத ஜென்மம் நீங்கி நற்கதியை அடைவேன்.” என்று வணக்கமாக கூறியது.

அரசன், அந்த பிரேத ஜென்மத்தைப் பார்த்து, “நீ யார்? எவ்வாறு பேசுகிறாய்?  உன் வரலாறு என்ன?  அதை விளக்கமாக சொல்ல வேண்டும்” என்று கேட்டான்.
                     
உடனே அந்தப் பிரேத ஜென்மம், அரசனை நோக்கி, “வேந்தனே!   என் சரித்தரத்தை சொல்கிறேன், நீங்கள் கருணையுடன் கேட்க வேண்டும். வைதீசம் என்று ஒரு பட்டணம் உண்டு. அந்தப் பட்டணத்திலே இரதகள, துரகபதாதிகள் எப்போதும் நிறைந்திருக்கும். அந்த நகரத்தில் தான், நான் வைசிய குலத்தில் பிறந்து வளர்ந்து திருமணஞ் செய்து சுகமாக வாழ்ந்து வந்தேன்.

“என் பெயர் தேவன்!   நான் என் வாழ்நாள் முழுவதும் தேவாராதனை, பிரதானுஷ்டானம் செய்து வந்தேன். பெரியோர்களை வணங்கி தேவாலயம் பிரமாலையம் முதலியவற்றை சீர் செய்து புதுப்பித்தேன். ஏழைகளையும் அனாதைகளையும் அகதிகளையும் நாதியற்றவர்களையும் ரட்சித்து, சகல ஜீவர்களுக்கும் என்னால் இயன்ற அளவுக்கு நன்மைகளையே செய்து என் வாழ்நாள் முடிந்து நான் மடிந்தேன்.

“புத்திரன் சுற்றத்தார் யாருமில்லை. அதனால் எனக்கு யாரும் கர்மம் செய்யாததால் நான் இத்தகைய பிரேத ஜென்மத்தை அடைந்தேன். இந்த பிரத ஜென்மத்தை நான் அடைந்து வெகு காலமாயிற்று. இந்த ஜென்மத்தொடு நான் மிகவும் வருந்துகிறேன்.

“இறந்தவனுக்கு செய்ய வேண்டிய சமஸ்க்காரம், சஞ்சயனம், விருஷோர்சர்க்கம், சோடசடம், சபிண்டிகரணம், மாசிகம், சிரார்த்தம் முதலிய சடங்குகளை இறந்தவனின் மகன், அல்லது மற்ற உறவினர்கள் ஒருவருமே செய்யாவிட்டால்,  இறந்தவன் பிரேத ஜென்மத்தையே அடைவான்.

“உலகத்தை ஆளும் உனக்கு நான் சொல்ல வேண்டியதில்லை. நீ குடிமக்களின் காவலன், உறவினன். ஆகையால், அடியேனுக்கு செய்தற்குரிய கர்மங்களை செய்து,  இந்தப் பிரேத ஜென்மத்தை நீக்க வேண்டும்.

“என்னிடம் சிறப்பான நவரத்தினங்களில் சிறந்த மாணிக்கம் இருக்கிறது. அதை பாதகாணிக்கையாக ஏற்றுக் கொள்வாயாக..” என்று பிரேத ஜென்மம் அரசனிடம் கொடுத்தது.
                           
அரசன் அந்த பிரேத ஜென்மத்தை நோக்கி, “பிரேதமே! நான் எப்படி கருமஞ் செய்ய வேண்டும்? இது எப்படி நீங்கும்? பிரேத ஜென்மத்தை நீ எவ்வாறு அடைந்தாய்! அவற்றை நீ எனக்கு சொல்ல வேண்டும்.” என்று அரசன் கேட்டான்.
   
“அரசே! நல்லவர்களையும், தெய்வ சொத்துக்களையும், ஸ்த்ரி, பாலகன், அந்தணன், ஊமை, செவிடன் ஆகியோர்களின் பொருள்களை அபகரித்தவன் எவனாயினும், எத்தகைய தானங்களைச் செய்தவனாயினும் இத்தகைய பிரேத ஜென்மத்தை அடைவான்.

“தன் கோத்திரத்தில் பிறந்த பெண்ணையும், பிறனுக்குரியவளையும் விரும்பியவன் பிரேத ஜென்மத்தை அடைவான்.

“தாமரை மலர்களையும் பொன், பொருள், ஏழைகளை ஏமாற்றி பொருள்களை அடைந்தவர்களும் திருடினவர்களும் பிரேத ஜென்மத்தை அடைவார்கள்.

“போரில் புறங்காட்டி ஓடியவனும், செய்நன்றி மறந்தவனும், நல்லது செய்தவனுக்கே தீமைகளைச் செய்தவனும் பிரேத ஜென்மத்தை அடைவார்கள்.” என்று கூறியது.

“பிரேத ஜென்மம் எப்படி நீங்கும்? அத்தகயவனுக்கு எத்தகைய கர்மத்தை செய்ய வேண்டும்? எவ்விதம் செய்ய வேண்டும் என்பதைச் சொல்.” என்றான்.

“வேந்தனே! இதைப் பற்றி சுருக்கமாக சொல்கிறேன் கேள்! நாராயனபலி சகிதனாய், ஸ்ரீமான் நாராயனைப் போல திவ்விய மங்கள விக்கிரகம் ஒன்றைச் செய்து, சங்கு சக்கர, பீதாம்பரங்களைக் கொண்டு அலங்காரஞ் செய்து, கிழக்கு திசையில் ஸ்ரீதரனையும், தெற்குத் திக்கில் மஹா சூரனையும்,  மேற்குத் திசையில் வாமனனையும், வடக்கில் கதாதரனையும் நடுவில் பிரமருத்திரயரோடு ஸ்ரீ மஹா விஷ்ணுவையும் நிலைநிறுத்தி, ஆராதனை செய்து, வளம் வந்து வணங்கி, அக்கினியிலே ஹோமஞ் செய்து, மீண்டும் நீராடி விருஷோர்சர்க்கம் செய்து, பதின்மூன்று பிராமணர்களை வருவித்து, அவர்களுக்கு வேண்டியதைக் கொடுத்து பிருஷ்டாணன் போஜனம் செய்வித்து, சய்யாதனம், கடகதானம் கொடுத்தால், மரித்தவன் பிரேத ஜென்மத்திலிருந்து நீங்குவான்.” என்று பிரேதம் கூறியது.
                                       
மன்னனைத் தேடிக் கொண்டிருந்த அவனது பரிவாரங்கள், அவன் அமர்ந்திருந்த தடாக கரைக்கு வந்து கொண்டிருந்ததை பிரேதம் பார்த்து மறைந்து விட்டது. ‘இது என்ன விந்தை!   சேனை வீரர்களை கண்டதுமே பிரேத ஜென்மம் மறைந்து விட்டதே!’

அரசன் தன் சேனைகளோடு தன் நகரத்தை அடைந்தான். பிறகு அந்த பிரேத ஜென்மத்தைக் குறித்து அதற்குரிய கர்மங்களையும் தர்மங்களையும் முறைப்படி செய்தான். உடனே அந்த பிரேதம் தனக்கு நேரிட்ட ஆவிப் பிறவியை நீங்கி நல்லுலகை அடைந்தது என்று திருமால் கூறினார்.
                                 
அதைக் கேட்டதும் கருடன் ஜெகத்காரணனை நோக்கி, “இவை தவிர வேறு என்ன கர்மங்களை செய்தால் பிரேத ஜென்மம் நீங்கும்? அதனையும் எனக்கு கூறியருள வேண்டும்.” என்று வேண்டினார்.
                     
அதற்கு திருமால், “ஆழிவண்ண, கருடா! எண்ணெய் நிறைந்த ஒரு குடத்தைப் பெரியோர்களுக்குத் தானம் கொடுத்தாலும் சகல பாவங்களும் நசித்துப் பிரேத ஜென்மமும் நீங்கி விடும். மரித்தவன் இன்பமுடன் மீளாவுலகை அடைவான்.

“குடங்களில் பாலும் நெய்யும் நிரம்ப வார்த்து அஷ்ட திக்கு பாலகர்களையும் அஜசங்கரரையும் ஸ்ரீஹரியையும் ஆராதனை செய்து அக்குடங்களை தானம் கொடுப்பது மிகவும் சிறப்புடையதாகும்.” என்றார்.

21. சபிண்டிகரணமும், கதிபதிகளும்

கவான் அவ்வாறு பிதுர்க் கர்மம் செய்வதற்கு உரிமையுடவன் யார் என்பதைக் கூறிய பிறகு, கருடன் அச்சுத பிரானைத் தொழுது வணங்கி, “ஒ! சர்வ ஜெகன்னாதா!! இறந்தவனைக் குறித்து சபிண்டிகரணம் செய்வதனால் இறந்தவன் அடையும் பலன் என்ன? அதை செய்யாவிட்டால் அவன் எந்தக் கதியை அடைவான்?

“எப்போதோ மரித்தவனுக்கும், அண்மையில் மரித்தவனுக்கும் பிண்டம் ஒன்று சேர்ப்பது எவ்விதம்? ஒன்று சேர்த்தால் அவர்கள் எக்கதியடைவார்கள்? அகமுடையான் உயிரோடு இருந்து அகமுடையாள் இறந்தால் அவளுக்குச் சபிண்டிகரணம் செய்வது எப்படி? இவற்றையெல்லாம் உலக நன்மையைக் கருதி அடியேனுக்குக் கூறியருள வேண்டும்.” என்று வேண்டினார். அதற்கு ஸ்ரீ கேசவபிரான் கருடனை நோக்கி கூறலானார்.
             
“ஒ விநுதையின் மகனே! உலக வாழ்வைவிட்டு உடலையும் விட்டு மாண்டவனுக்கு, வருஷம் முடியும் வரை சகலமும் சாஸ்திரப்படி செய்து சபிண்டிகரனமும் செய்து அவன் குடும்பத்தில் முன்னமே மாண்டவருடைய பிண்டத்தோடு இறந்தவனுக்குரிய பிண்டத்தையும் சேர்த்தல் வேண்டும்.

“அவ்வாறு செய்தால், இறந்தவன் பிரேதத்துவம் நீங்கி, பிதுர்த் தேவர்களோடு சேர்ந்து கொள்வான். இறந்தவன் இறந்த பன்னிரெண்டாம் நாளிலும், மூன்றாவது பக்ஷத்திலும், ஆறாவது மாதத்திலும் சபிண்டிகரணம் செய்யலாம்.

“தந்தை இறக்க, அவன் புத்திரன் தந்தைக்குரிய கருமங்கள் எல்லாவற்றையுஞ் செய்து, சபிண்டிகரணம் மட்டுமே செய்யாமல் நிறுத்தி வைத்திருக்குஞ் சமயத்தில், கர்மஞ் செய்த புத்திரனுக்கு கல்யாணஞ் செய்ய நேரிட்டால் உடனடியாகச் சபிண்டிகரனத்தைச் செய்த பிறகுதான், மணவினையைச் செய்தல் வேண்டும்.

“சபிண்டிகரணம் செய்யும் வரையிலும் மாயந்தவன், பிரேதத்துடனே இருப்பான். ஆகையால் கருமஞ் செய்தவனுக்கு சிறிது அசுத்த தோஷம் இருக்கும். ஆகையால் அவன் சுபகாரியங்களில் ஒன்றைக் கூட செய்யலாகாது.

“சந்நியாசிகளுக்குக் கூட பிக்ஷையிடல் கூடாது. பிண்டம் சேர்த்த பிறகு, இறந்தவன் பிரேதத்துவம் நீங்கி, பிதிர்த்துவம் பெற்று மகிழ்வான். ஆதலாலும், தேகம் அநித்திய மாதலாலும்,   கிருத கிருத்தியம் பலவிதமாதலாலும், பன்னிரெண்டாம் நாளிலேயே சபிண்டிகரணம் செய்வது மிகவும் உத்தமமாகும்.

“ஔபாசணம் செய்வதற்கு, விக்னம் நேரிட்டாலுங்கூடப் பன்னிரெண்டாம் நாளில் சபிண்டிகரணம் செய்யலாம். சபிண்டிகரணம் செய்த பிறகு தாய்தந்தையர் குலத்தில் மூன்று தலைமுறையில் உள்ளவருக்கும் சிரார்த்தம் செய்ய வேண்டும். சோடசம், சபிண்டிகரணம் முதலியவற்றைச் செய்தால் இறந்தவன் பிரேதத்துவம் நீங்கி பிதுர்களோடு சேர்ந்து மகிழ்ந்து இன்பமடைவான்.
                                                           
“பெண்ணைப் பெற்றவன் பொருள் சிறிதும் வாங்காமல், அந்தப் பெண்ணைக் கன்னிகாதானம் செய்திருந்தால், பின்பு அவன் இறந்தால் அவளுடைய அகமுடையான் கோத்திரத்தைச் சொல்லி, சமஸ்கிரியைகளையுஞ் செய்தல் வேண்டும்.

“இறைச்சியை விற்பவனைப் போலப் பெண்ணைப் பெற்றவன் , விலைப்பெற்று பெண்ணைக் கொடுத்திருந்தால், அவன் மாண்டுபோனால் அவளுக்கு அவளுடைய பிதாவின் கோத்திரத்தைச் சொல்லிக் கிரியைகளைச் செய்ய வேண்டும்.

“பிதாவுக்கு புத்திரன் மட்டுமே கர்மம் செய்தல் வேண்டும். புத்திரன் இல்லாவிட்டால் இறந்தவனுடைய கனிஷ்டனாயினும், ஜெஷ்டனாயினும், அவர்களில் ஒருவனுடைய புத்திரனாயினும் கர்மம் செய்ய வேண்டும்,

“மாயந்தவனுடைய சகோதரர்கள் பங்கு பிரித்துக் கொண்டு, தனித்தனியாக வாழ்வாராயின் அவனுடைய அகமுடையாள் கர்மம் செய்ய வேண்டும்.

“இறந்தவனுக்கு புத்திரரும், மனைவியும் இல்லாவிட்டால், மரித்தவனுடைய தாயாதி செய்ய வேண்டும். தாயாதியும் இல்லாவிட்டால் அவனுக்கு மாணாக்கன் இருந்தால் அவன் கர்மம் செய்ய வேண்டும்.

“மேற்சொன்னவர்களில் ஒருவருமே இல்லாவிட்டால், புரோகிதனே இறந்தவனுக்குரிய கர்மங்களை செய்யலாம்.

“நாலைந்து பேர் சகோதரர்கள் இருந்து அச்சகோதரர்களில் ஒருவருக்கு மட்டுமே புத்திரன் இருந்தால், மற்ற சகோதரர்களும் புத்திரன் உடையவறேயாவர் அவ்விதமாகவே ஒருவருக்கு நாலைந்து மனைவியர் இருந்து அவர்களில் ஒருத்திக்கு மட்டுமே புத்திரன் இருந்தால் மற்ற மனைவியரும் புத்திரனுடயவறேயாவர்.

“புத்திரன் பூணூல் அணிவதற்கு முன்னமே தந்தை இறந்தால் அந்தப் புத்திரனே கர்மம் செய்ய வேண்டும்.

“புத்திரனைப் பெறாதவள் இறந்தால், அவளுக்கு அவளுடைய கணவனே கருமஞ் செய்ய வேண்டும்.

“இறந்தவனுக்காக சபிண்டிகரணம் செய்த பிறகு, தெரியாமையினாலாவது பிதுர்த் தேவர்கள் அனைவரையும் குறித்தல்லாமல் இறந்தவனை மட்டுமே குறித்துச் சிரார்த்தம் செய்தால், இறந்தவனும் சிரார்த்தம் செய்பவனும், சிரார்த்ததைச் செய்விக்கின்ற புரோகிதனும்  நரகம் அடைவார்கள்.
               
“இறந்தவனுக்குப் பலர் இருந்தாலும் ஓராண்டு வரையிலும் ஒருவனே கிரியைகள் அனைத்தையும் செய்ய வேண்டும். வருஷம் முடியும் வரை, நித்திய சிரார்த்ததொடு ஒரு குடத்தில் புனல் நிறைத்து உதககும்ப தானத்தை செய்தல் வேண்டும்.

“கர்மங்களைத் தவறாமல் செய்தால், இறந்தவன் விமானம் ஏறி நல்லுலகம் அடைவான். பாட்டன் உயிரோடு இருக்கும்போது தகப்பன் இறந்தால் அவனுக்கு சபிண்டிகரணம் செய்யலாகாது.

“பாட்டன்  இறந்த பிறகு, அந்தப் பாட்டனுக்கு சபிண்டிகரணம் செய்து, பின்பு இறந்த தந்தைக்குச் செய்ய வேண்டும்.

“பிதாவும் பிதாவைப் பெற்ற பாட்டியும் உயிரோடு இருக்கும் போது, தாயார் இறந்தால், அவளுக்கும் சபிண்டிகரணம் செய்யலாகாது. அவர்கள் இருவரும் இறந்த பிறகு, அவர்களுக்குச் சபிண்டிகரணஞ் செய்த பிறகுதான் தாய்க்குச் செய்ய வேண்டும்.

“பிறனுக்கு உடன்பட்டு, அவள் ஏவலால் தன் கணவனை இழந்து, பிறந்த குலத்துக்கும் தோஷம் உண்டாக்கும் பெண் பேயானவள், என்றுமே மீளாத நரகத்தை அடைவாள்.

“கணவன் நல்லவனாயினும், கெட்டவனாயினும், அறிஞனாயினும், அறிவிளியாயினும் அவன் உயிரோடிருக்கும் போதும் அவன் இறந்த பிறகும் கணவனையே தெய்வம் என்று பக்தி செய்து கற்பு ஒழுக்கத்தில் நிலை நிற்பவளே,  உத்தமியாவாள்.

“கொண்ட கணவனை மதிக்காமல் அலட்சியம் செய்து, தன் இஷ்டமாய் அலைபவள், ‘சீசீ! இவளும் ஒரு பெண்ணா?’ என்று பலராலும் ஏசப்பட்டவள், மறுஜென்மத்தில், ஒரு பரம துஷ்டனைக் கணவனாக அடைந்து, அவனால் அடுத்தடுத்து கண்டிக்கப்பட்டும் துன்பப்பட்டும் வருந்தி மிகவும் துன்பமடைவாள்.

“கணவன், தெய்வ வழிபாடு, அதீதி ஆராதனை, விரதானுஷ்டம் முதலியவற்றைத் செய்வானாகில், அவன் மனைவியும் அவனுக்கு அனுகூலமாக யாவையுஞ் செய்ய வேண்டும்.

“கணவனுக்கு பணி செய்வதே  தர்ம பத்தினியின் தர்மமாகும். இந்த தருமம் எல்லாருக்கும் பொதுவானது. பெண்கள் உத்தமமான ஒருவனைத் தனது கணவனாக அடைந்து நல்ல மக்களைப் பெற்றும், குலவிருத்தி செய்து, தன்னைப் பெற்ற தாய்தந்தைக்கும், மணந்தவனுக்கும் புகழைத் தேடி, சுமங்கலியாகவே மரித்து உத்தமலோகத்தை அடைவார்கள்.

“இறந்த பிறகும், துன்பப்படாமல் இன்பமடையும் பொருட்டு பன்னிரெண்டாம் நாள் சாஸ்திர விதிப்படி சபிண்டிகரணம் செய்து ஒரு வருடம் வரையிலும் நித்திய சிரார்த்தம் செய்ய வேண்டும்.” என்று திருமால் திருவாய் மலர்ந்தருளினார்.

20. கர்மங்களை செய்ய கடமைப்பட்டவன் புத்திரன்.

“புள்ளரசே! ஒருவன் தனக்கே தனது இல்லாள் வயிற்றில் பிறந்த பிள்ளையின் முகத்தைத் தன் கண்ணால் பார்த்து விட்டானென்றால் புத் என்ற நரகத்தை அந்த ஜென்மத்தின் இறுதியில் காணமாட்டான். மணம் புரிந்து கொண்ட ஒருவனுக்கும் ஒருத்திக்குமே  புத்திரன் பிறந்தால், அவள் குலத்துப் பிதிர்த் தேவர்கள் மகிழ்ச்சியடைவார்கள். ஒருவனுக்கு முதல் மகனே அதாவது தலைச்சவனே தன் தந்தை மரித்தால் அவனது ஈமக் கிரியைகளையும் கர்மங்களையும் செய்ய கடமைப்பட்டவன். மற்ற புத்திரர்கள் இருந்தால் இவர்கள் இறந்த தகப்பனைக் குறித்து சிறிது கர்மங்களும் சிரார்த்தாதிகளையுமே செய்யக் கூடும்.

“ஒருவன் தனக்கு பௌத்திரன் பிறந்து அவனை எடுத்தப் பார்த்த பிறகே மரிப்பானாகில்,  இறுதிக் காலத்தில் அவன் நல்லுலகையடைவான்.

“கொள்ளுப் பேரனைப் பார்த்த பிறகு மாண்டவன், அதைவிட நல்லுலகை அடைவான்.

“பெண்ணைப் பெற்றவனுக்கு வாய்க்கும் மணமகன், அந்தப் பெண்ணுக்கு விலைகொடுக்காமல் திருத்துழாயோடு  அவன் கன்னிகாதானம் செய்து கொடுக்க, அவளை மணம் புரிந்து கொண்டு அவளோடு வாழ்ந்து புத்திரனைப் பெறுவானேல், அந்தப் புத்திரன் தன் குலத்து இருபத்தோரு தலைமுறையினரையும் கரையேற்றுவான்.

“அவ்வாறு பிறந்த புத்திரனே தாய்தந்தையர்க்கு கர்மஞ் செய்யத்தக்க உரிமையுடையவன். ஒருவன் மரித்தால் அவனுடய காதற் கிழத்தியின் மகன் சிறிது கர்மம் மட்டுமே செய்யலாம்.

“அவன் தான் செய்யத் தகுந்த சிறிதளவு கர்மத்தைச் செய்வதோடு நிற்காமல் முற்றும் செய்வானாயின், செய்தவனும் மரித்தவனும் நரகம் சேர்வார்கள். ஆனால் காமக் கிழத்தியின் மகன் தன்னைப் பெற்றவளைக் குறித்து ஆண்டுதோறும் சிரார்த்தம் செய்யலாம். பெற்றவனைக் குறித்தன்று.

“அவன் தலைமுறையில் உள்ளோரைக் குறித்து ஒன்றும் செய்யலாகாது. காமக் கிழத்தியின் புத்திரராயினும், அவர்களைப் பெற்றவன் இறந்தால் அவனைக் குறித்துத் தானங்களைச் செய்யலாம்.

“ஆனால் அந்தணருக்குப் போஜனம் செய்யலாகாது. வேசிப்புத்திரன் அன்ன சிரார்த்தம் செய்வானாயின் அவனும் சாப்பிட்டவனும் பிதுர்த்தேவரும் மீளா நரகம் எய்துவார்கள்.

“நல்ல குடும்பத்தின் மூலம் பெறுகின்ற புத்திரனே சிரேஷ்டமானவன். ஆகையால், மக்கள் அனைவரும் சற்புதிரனையே பெறுதல் வேண்டும்.” என்றார் திருமால்.

19. செய்த பாவத்தினாலேயே உலகில் பிறவி எடுக்கும் ஜீவன்

ஸ்ரீயப்பதியான ஸ்ரீமந் நாராயனமூர்த்தியானவர் கருடாழ்வானை நோக்கி கூறலானார், “ஒ! காசிப் புத்திரனே! மேலே சொன்னதைத் தொடர்ந்து இனி, தான் செய்த பாவத்தினாலேயே உலகில் பிறவி எடுத்த ஜீவன் மரிக்கிறான்.

“கர்ப்பத்திலேயே கருவானது சிதைந்து விட்டால் ஒரு கிரியையும் செய்ய வேண்டியதில்லை. ஐந்து வயதுக்குட்பட்டு இருந்தால் சாஸ்திரத்தில் கூறியுள்ளபடி செய்து ஊர்க்குழந்தைகளுக்கு  பால் பாயாசம் போஜனம் முதலியவற்றை வழங்க வேண்டும்.

“குழந்தை இறந்த பதினொன்றாம் நாளும் பன்னிரெண்டாம் நாளும் சாஸ்திரத்தில் சொல்லியுள்ளது போலச் சில கர்மங்களை செய்யலாம். விருசொர்ச்சனமும் விசேஷ தானங்களையும் ஐந்து வயதுக் குழந்தை மரித்தர்காகச்  செய்ய வேண்டியதில்லை.

“மரித்தவன் பாலகனாயினும், இளைஞனாயினும், விருத்தனாயினும், உதககும்ப தானத்தை அவசியம் செய்ய வேண்டும்.

“மூன்றாம் வயது ஆவதற்குள் மரித்து விடுங்குழந்தைகளைப் பூமியில் புதைக்க வேண்டும்.

“இருபத்து நான்காவது மாதம் முடிந்து இருபத்தைந்தாவது மாதம் பிறந்தவுடனே இறந்த குழந்தைகளை அக்கினியில் தகனஞ் செய்ய வேண்டும்.

“பிறந்த ஆறு மாதங்கள் வரையில் சிசுவென்றும், மூன்று வயது வரையில் பாலகன் என்றும், ஆறு வயது வரையில் குமரன் என்றும், ஒன்பது வயது வரையில் பவுண்டகன் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
 
“ஐந்து வயதுக்கு மேல் பன்னிரண்டு வயது நிரம்பியேனும் மரித்துவிட்டால் விருஷோந்தம்  செய்ய வேண்டும். பால் தயிர் வெல்லம் சேர்த்து பிண்டம் போடல் வேண்டும்.

“குடம், குடை, தீபம் முதலியவற்றை தானம் செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டால், மறுபிறவியில் மரமாகத் தோன்றுவான். அந்த மரமும் நெல் குத்தும் உலக்கையாக செய்யப்பட்டு விடும்.

“பூணுலை இடதுபக்கம் தரித்துக் கொண்டு, தருப்பையுடன் ஏகோதிஷ்டி போன்ற சிரார்த்தங்களைச் செய்தால், மரித்தவன் மறுஜென்மத்தில் நல்ல குலத்தில் பிறந்து தீர்க்காயுளுடன் வாழ்வான். நல்ல புத்திரனையும் பெறுவான்.

“தனக்குத் தன்னுடைய ஆன்மாவே புத்திரனாக ஜெனித்தல் உண்மை! ஆகையால் புத்திரன் இறந்து விட்டான் என்றால், அந்தப் புத்திரனுக்கு அவனுடைய தந்தையும், தந்தை மாய்ந்தால் அவனுடைய புத்திரனும் கர்மம் செய்ய வேண்டும். ஒருவன், தனக்குத்தானே புத்திரன் ஆகிறான் என்று வேதஞ் சொல்கிறது.

“தண்ணீர் நிறைந்த குடங்களை வரிசையாக வைத்து பகலில் அவற்றின் உள்ளே சூரியனைப் பார்த்தாலும், பௌர்ணமி இரவுகளில் சந்திரனைப் பார்த்தாலும் ஒவ்வொரு குடத்திலும் சந்திர சூரிய உருவங்கள் தெரிவது போல், ஒருவனே தனக்குப் பல புத்திரர்களாக பிறக்கின்றான்.

“அதனால்தான் தன் தந்தைகளைப் போன்ற உருவமும் அறிவும் ஒழுக்கமும் உடையவர்களாக விளங்குகின்றான். ஆயினும் குருடனுக்கு குருட்டுப் பிள்ளையும், ஊமைக்கு ஊமைப் பிள்ளையும், செவிடனுக்குச் செவிட்டுப் பிள்ளையும் பிறத்தல் என்பது இல்லை. எனவே தந்தைக்கு அமைந்துள்ள சிறப்பான அம்சங்களில் ஏதேனும் ஒன்று தயையனுக்கும் பொருந்திருக்கும்.” என்றார் திருமால்.

கருட பகவான் பரமபதியை வணங்கித் தொழுது, “ஜெகன்னாதா! பலவிதமான புத்திரர்கள் பிறக்கின்றார்கள். விலைமகளுக்கு பிறந்த புத்திரன் தந்தைக்கு கருமம் செய்யலாமா? அப்படி அவன் கருமஞ் செய்தால் அவனுக்கு நல்லுலகம் கிடைக்குமா? பெண் ஒருத்தியிருந்து, அவள் வயிற்றிலும் பிள்ளை இல்லை என்றால் அவன் மரித்தபின் அவனது கருமத்தை யார் செய்ய வேண்டும். இவற்றை விளக்கியருள வேண்டும்.” என்று கேட்க, பக்தவச்சலனாகிய பரமன், கருடனை நோக்கி கூறலானார்.

18. ஜனன மரண விதிகள்!

ருட பகவான் ஆதிபகவனைத் தொழுது வணங்கி, “சர்வேசா! பூவுலகில் பிராமண, ஷத்திரிய, வைசிய, சூத்திரர் என்ற நான்கு வகை குலத்தினர் இருக்கிறார்கள் அல்லவா? அவர்களல்லாமல் மிலேச்சர் என்று ஒரு வகை அமைப்பினரும் இருகிறார்கலல்லவா? அவர்களில் பலர் பலவிதமாகயிருகின்றார்கள். அவர்கள் குறிப்பிட்ட காலத்தில் இறத்தலுக்குக் காரணம் என்ன என்பதை நவின்றருல வேண்டும்.” என்று வேண்டினான்.
                                                 
நெடுமால் கருடனை நோக்கி, “நீ கேட்ட கேள்வி சிறந்தது தான். அதற்குரிய விடையைக் கூறுகிறேன் கேள். உயிரினங்கள்  மரிக்கும் காலத்தில் ஜீவனைக் கவர்வதற்கென்றே காலன் என்பவன் நியமிக்கப் பெற்றிருக்கிறான்.

“உலகத்தில் வாழ்கின்ற ஜீவர்கள் அவர்கள் செய்யும் பற்பல விதமான தோஷங்களால் ஆயுள் குறைந்து மாய்கிறார்கள்.

“மரித்தவன் வீட்டில் உணவருந்துவோனும் பிறனுடைய மனைவியைப் புணர்வதற்கு இச்சிப்பவனும், தனக்குத் தகாத இழிதொழிலைச் செய்பவனும் வாழ்நாளை இழப்பார்கள்.

“இகவாழ்வுக்கும், பரலோக வாழ்வுக்கும் உறுதியான தான நல்வினைகளைச் செய்யாதவனும் பெரியோர்களைப் போற்றி பூஜி யாதவனும், தூய்மையில்லாதவனும், தெய்வபக்தி இல்லாதவனும் யம லோகத்தில் எப்போதும் உழல்வார்கள்.

“பிறருக்குக் கேடு நினைப்பவனும் பொய்யுரைப்போனும், ஜீவன்களிடத்தில் கருணையில்லாதவனும், சாஸ்திர முறைப்படி வாழாதவனும் தனக்குரிய அறநெறிகளைத் தவிர்த்து, பிறருக்குரிய கர்மங்களை செய்பவனும் யம லோகத்தில் வேதனைப்படுவார்கள்.

“புண்ணிய தீர்த்தம் ஆடாத நாளும், ஜெபவேள்விகள் செய்யாத திவசமும், தேவராதனை செய்யாத தினமும், புனிதரான மகான்களையும், உலகிற்கு நல்லவைகளை செய்யும் நல்லவர்களை வழிபடாத பகலும், சாஸ்திரம் உணராத நாளும், வீணாளேயாகும்.

“சூத்திர மரபில் பிறந்தவன், பிரம குலத்தினரே தெய்வம் என்று நினைத்துப் பக்தி செய்து, அவரிட்ட தொழிலைப் புரிந்து தாசனாய் இருப்பானாகில் அவன் நற்கதியை அடைவான். அவன் வேறொரு கர்மமும் செய்ய வேண்டியதில்லை. அவன் உயர்ந்த ஜாதியருக்குரிய கர்மங்களைச் செய்வானேயாகில் நலிவுருவான்.
                                 
“கருடா! மனிததேகம் என்ன, பூவுலகில் சஞ்சரிக்கும். எந்த ஜீவனின் தேகமும் நிச்சயமற்றது. நிராதாரமானதாக உள்ளது. சுக்கில சுரோணிதத்தால்(விந்து, நாதம்) உண்டாவது, அன்னபானாதிகாளால் விருத்தியடைவது.

“காலையில் வயிறு நிரம்ப உண்ட அன்னம் மாலையில் நசித்து விடும். உடனே பசிக்கும். மீண்டும் அன்னம் உண்ணாவிடில் மெய் தளரும் குலையும்.

“ஆசையால் உண்டான சரீரம் அநித்தியமானதென்றும் அது கர்ம வினையினால் வருவது என்றும் எண்ணி, மீண்டும் பூவுலகில் பிறவி எடுக்காமல் இருக்கும் பொருட்டு நற்கர்மங்களைச் செய்ய வேண்டும்.

“பூர்வ கர்மத்தால் வருகின்ற தேகத்தை யாருடையது என்று கூறலாம்?    அதை வீணாகச் சுமந்து திரிந்து மெலிகின்ற ஜீவனுடையது என்று சொல்லலாமா? யாருக்கும் சொந்தமில்லை. ஜீவன் போன பிறகு புழுவாகவும் சாம்பலாகவும் அழியும் உடலானது. ஒருவருடையதும் அல்லவென்று அறிந்தும், சரீரத்தின் மீது ஆசை வைக்காமல் பகவத் பாகவத ஆசாரிய கைங்கரியங்களைச் செய்ய வேண்டும்.

“பாவங்கள் என்பவை மனம், வாக்கு, காயம் ஆகியவற்றால் செய்யப்படுகின்றன. அதிகமாக பாவங்களைச் செய்தவன் நாய், நரி முதலிய இழிந்த ஜென்மம் அடைவான்.

“ஜீவன் கர்ப்ப வாசம் செய்யும் காலத்தில் தாயினுடைய மல மூத்தராதிகளால் அதிகமாகத் துன்பங்களை அடைவான். இறப்பதை விட பிறப்பதில் உள்ளதான துன்பத்தையும், கர்மாதியையும் எண்ணி ஜீவனானவன் நல்ல ஒழுக்க நற்பண்புகளுடன் ஜீவிக்க வேண்டும்.

“தாய் வயிற்றிலிருந்து பிறந்தவன் பால்ய வயதில் உண்டான விளையாட்டுகளால் தனக்கு உறுதியாக உள்ளது எது என்பதை அறிவதில்லை. முதுமைப் பருவத்தில் சோர்வாலும் கிலேசத்தாலும் ஒன்றையும் உணர்வதுமில்லை. இவ்விதம் உறுதியை உணராமல் ஒழிபவரே மிகப் பலராவர்.

“பூர்வ ஜென்ம புண்ணியத்தால் உறுதியானதை உண்பவன் எவனோ அவனே நிரதசிய இன்ப வீடாகிய நமது உலகையடைவான். கர்ம வினைகளாலேயே ஜீவன் பிறந்து, பிறந்து இறக்கிறான்.

“பிறந்து அதிக வயது உலகில் வாழாமல் ஐந்து ஆண்டுகளுக்குள்ளாக மரிப்பது என்பது மகா பாவத்தினால் என்பதை அறிவாயாக. கொடிய பாவம் செய்தவனே பிறந்த உடனே மறித்து, மீண்டும் பிறந்து மடிகிறான். அவன் பிறத்தலுக்கும் இறத்தலுக்கும் கணக்கென்பதில்லை.

“பூர்வ ஜென்மத்தால் நல்ல நெறிப்படி வாழ்ந்து தான தர்மங்களை மனங்கோணாமல் செய்து வரும் சேதனன் பூமியில் பிறந்து தன் மனைவி மக்களோடு நெடுங்காலம் சுகமாக வாழ்ந்து இறுதியில் நல்லுலகம் சேர்வான்.
                                     
“ஒ, வைனதேயா!  கற்பந்தரித்த ஆறு மாதத்துக்குள் அந்தக் கர்ப்பம் எந்த மாதத்திலாவது கரைந்து விழுந்ததாயின் விழுந்த மாதம் ஒன்றாயின் ஒருநாளும், இரண்டானால் இரண்டு நாட்களும், மூன்றாயின் மூன்று நாட்களும், நான்காயின் நான்கு நாட்களும், ஐந்தாயின் ஐந்து நாட்களும், ஆராயின் ஆறு நாட்களும், கர்ப்பத்தை கருவுற்றிருந்த மாதாவுக்கு மட்டுமே சூதகத் தீட்டு உளதாகும். பிதாவுக்கு அத்தீட்டு இல்லை.

“கருவழியாமல் பத்தாம் மாதத்தில் பிறந்து மூன்று வயதுக்குள் மாண்டால், இறந்த அந்தக் குழந்தையை உத்தேசித்து பால்சோறு ஊர்க்குழந்தைகளுக்குக்  கொடுக்க வேண்டும்.

“மூன்று வயதுக்குமேல் ஐந்து வயதுக்குள் ஒரு குழந்தை இறந்து போகுமானால் மேற்சொன்னது போலவே பலருக்கு அன்னம் கொடுத்தல் வேண்டும்.

“இவ்விதமில்லாமல் பிறந்த ஒரு மாதத்திற்குள் குழந்தை இறந்தால் அந்ததந்த வர்ணதாருக்குரியபடி செய்து தீர்த்தமும், பாலும், பாயசமும் முதலிய உணவுப் பொருட்களைத் திரவ வடிவில் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

“உலகில் பிறந்தவன் இறப்பதும், இறந்தவன் மீண்டும் பிறப்பதும் திண்ணமாகையால் இறந்த பிறகு மீண்டும் மறுபிறவி எடுக்காமல் மீளாவுலகெய்ய முயற்சி செய்ய வேண்டும்.

“இவைகளை முறைப்படி செய்யாவிட்டால், ஒரு நாளில் ஒரு வேளை கூட பசியாற, உண்ண வழியற்ற தரித்தரனுக்கு புத்திரனாகப் பிறந்து கூழ் குடிப்பதற்கு வகையில்லாமல் வருந்தி விரைவில் மடிந்து, மீண்டும் பிறப்பான்.
                       
“ஒருவன், தான் இறந்தால் மறு ஜென்மத்திலாவது உயர்ந்த குலத்தில் பிறக்க வேண்டும். சகல சாஸ்திரங்களிலும் நிகரற்ற நிபுணனாக விளங்க வேண்டும் என்று கருதி அதற்குரிய கர்மங்களைச் செய்வதைவிட, ஜென்மமே வராமைக்கு உரிய கர்மங்களைச் செய்வதே மிகவும் நல்லது.

“தீர்த்த யாத்திரை, சேது புனித நதிகளில் நீராடியவர், மனத்தூயமையுடயவர், பொய் சொல்லாமல் இன்சொல் பேசுவான், சகல் சாஸ்திர சம்பன்னனாவான். ஏராளமான சம்பத்துக்கள் இருந்தும், தானதர்மம் செய்யாதவன் மறுபிறவியில் தரித்தனனாக பிறப்பான். மனிதன் தனக்குள்ள சம்பத்துக்குத் தகுந்த படி தானதர்மஞ் செய்ய வேண்டும்.” என்று திருமால் கூறினார்.

16. பிரேத ஜென்மமடையக் காரணங்கள்:

ஸ்ரீமந்நாராயணன் இவ்வாறு கூறியதும் கருட பகவான், திருமகள் தலைவனைத் திருவடி தொழுது, “ஒ! அனந்த கல்யாண குணநிலையரே! ஒரு ஜீவன் எத்தகைய பாவங்களால் பிரேத ஜென்மத்தை அடைவான், அடைந்தவன் என்ன பொருளை உண்பான்? எங்கே வசிப்பான்? இவற்றை அடியேனுக்குப் புகன்றருள வேண்டும்.” என்று கேட்கவும், பரமபத நாதன் பக்ஷிராஜனை நோக்கி கூறலானார்:

“புள்ளரசே! பூர்வ ஜென்மத்தில் மகாபாவம் செய்தவனே பிரேத ஜென்மத்தை அடைவான். ஒருவன் பெருவழிகளில்  கிணறு, தடாகம், குளம், தண்ணீர்பந்தல், சத்திரம், தேவாலயம் பலருக்கும் பயன்படும்படியான தருமத்தைச் செய்து, அவனது குலத்தில் பிறந்த ஒருவன் அவைகளை விற்று தனதாக்கிக் கொண்டவனும், மரித்தவுடன் பிரேத ஜென்மத்தை அடைவான்.                                                                      
                                                         
“பிறருக்கு உரிமையான பூமியை அபகரித்தவனும், எல்லைகளை புரட்டித் தன் நிலத்தோடு சேர்த்துக் கொண்டவனும், தற்கொலை செய்து இறந்தவனும், மிருகங்களால் தாக்கியிறந்தவனும், சம்ஸ்காரம் செய்ய தன் குலத்தில் ஒருவரும் இல்லாமல் இறந்தவனும், தேசாந்திரங்களில் ஒருவரும் அறியாமல் இறந்தவனும், விருஷோர்சர்க்கம் செய்யாமல் மாண்டவனும், தாய் தந்தையருக்குச் சிரார்த்தம் செய்யாமல் இருந்து இறந்தவனும் பிரேத ஜென்மத்தை அடைவான்.

“கட்டிலில் படுத்துத் தூங்கிக் கொண்டோ, விழித்துக்கொண்டிருக்கும் போதோ செத்தவனும், தெய்வத்திரு நாமங்களை உச்சரிக்காமல் உயிர் விட்டவனும், ரஜஸ்வாலையான பெண், சண்டாளன் முதலியோரை தீண்டிவிட்டு ஸ்நானம் செய்யாமல் சூதகத் தீட்டோடு இறந்தவனும், ரஜஸ்வாலையாய் இருக்கும் போது அவ்வீட்டில் இறந்தவனும், தாய், மனைவி, பெண், மருமகள் முதலியவர்களுடைய சரீர தோஷத்தைத் தன் கண்களால் பாராமலேயே பிறர் வார்த்தைகளைக் கேட்டு ஜாதிப் பிரஷ்டம் செய்தவனும், மனு நூலுக்கு விரோதமாக தீர்ப்பு  வழங்குவோனும்,  தீர்மானம் செய்பவனும்,  அந்தணரையும் பசுக்களையும் கொல்பவனும் ஹிம்சிப்பவனும், கல்,  மதுபானம் முதலியவற்றை அருந்துவோனும், குரு பத்தினியைக் கூடியவனும் வெண்பட்டு, சொர்ணம் ஆகியவற்றை களவாடுவோனும், பிரேத ஜென்மத்தை அடைவார்கள்.
                       
“பிரேத ஜென்மம் அடைந்தோர் அனைவரும் எப்போதும் கொடிய பாலைவனங்களில் சஞ்சரித்து வருந்துவார்கள்.” என்றார் திருமால்.

15. தோஷ பரிகாரமும், முதன்மையானவர்களை பூஜித்தலும்.

“நைமிசாரணிய வாசிகளே! இவ்வாறு திருமால் கூறியதும் கருடாழ்வார், ஸ்ரீ மந்நாராயனமூர்த்தியைத் தொழுது “ஜெனார்தனா! பிரேத ஜென்மத்தையடைந்தவன் அந்த ஜென்மதிலிருந்து எவ்வாறு நீங்குவான்? எவ்வளவு காலம் ஒருவனுக்குப் பிரேத ஜென்மம் பிடித்திருக்கும்? இவற்றைக் கூற வேண்டும்.” என்று பிரார்த்தித்தான்.

அதற்கு திருமால் அவனை நோக்கி கூறலானார்.

“பட்சி ராஜனே! பிரேத ஜென்மத்தையடைந்தவன், தன் உறவினர்களின் கனவில் தோன்றினாலும், துன்பத்திற்கு மேல் துன்பங்கள் செய்தாலும் அதைப் பற்றி பெரியோரிடம் தெரிவித்து அவர்கள் விதிக்கும் தர்ம விதிகளில் சித்தம் வைத்து மாமரம், தென்னை மரம், சண்பகம், அரசு முதலிய விருட்சங்களை வைத்துப் பயிர் செய்ய வேண்டும். மலர் செடிகளை உண்டாக்கி நந்தவனம், அமைக்க வேண்டும். பசுக்கூட்டங்களை வயிறார மேய்வதன் பொருட்டு பசும்புல் வளரத் தக்க நிலங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும். தண்ணீருக்காக குளம் வெட்ட வேண்டும். பகவத் கைங்கரியம் பாகவத கைங்கரியம் முதலியவற்றைச் செய்ய வேண்டும்.


“கங்கை, யமுனை, காவிரி, தாமிரபரணி முதலிய நதிகளில் நீராடித் தானதர்மங்களைச் செய்ய வேண்டும். துன்பங்கள் எப்போது வருகின்றதோ, அப்போதெல்லாம் இவற்றை எல்லாம் அவசியமாக செய்ய வேண்டும். செய்யாவிட்டால் துன்பங்கள் மேலும் மேலும் விருத்தி யாகும்.

“பிரேத ஜென்மத் தோஷத்தால் தர்மச் செயல்களில் புத்தி நாடாமலிருக்க கூடும். பக்தியும் ஏற்படாமல் போகலாம். புத்தி நாடாவிட்டாலும், பக்தி வராவிட்டாலும் எவன் ஊக்கத்துடன் முயன்று அந்தந்த தர்மச் செயல்களைச் செய்கிறானோ அவன் இன்பமடைவான்.

“அதனால் பிரேத ஜென்மத்தை அடைந்தவனும் இன்பமடைந்து பூவுலகத்தை யடைந்து அங்கு தனது பிரேத சரீரத்தை நீக்கிக் கொள்வான். அவன் தனது குலம் விளங்க ஒரு புத்திரனை உண்டாகிக் கொள்வான் என்றருளினார்.
                       
அதற்கு கருட பகவான் திருமாலை நோக்கி, “ஆராவமுதே! ஒருவனுக்கு தன் குலத்தில் ஒருவன் பிரேத ஜென்மமடைந்திருகிறான் என்பது தெரியவில்லை. அப்பிரேத ஜென்மமடைந்தவன் சொப்பனத்தில் வந்து சொல்லவுமில்லை. அப்படியிருக்க, அவனுக்கும் அவன் குலத்தினருக்கும் துன்பம் மட்டுமே உண்டாகிறது. அவன் பெரியோரிடம் அந்த விஷயத்தை சொல்லி செய்ய வேண்டியவை யாவை...? என்று கேட்கிறான்.

“அவர்களும் பிரேத ஜென்ம தோஷத்தால் தான் இத்தகைய துன்பங்கள் நேரிடுகின்றன என்று சொல்கிறார்கள். அப்போது அவன் செய்ய வேண்டியவை யாவை? அவற்றைச் சொல்ல வேண்டும்.” என்று கேட்டான். திருமால் கருடனை நோக்கி கூறலானார்.
                         
“ஒ! புள்ளரசே!  இது போன்ற சமயங்களில் பெரியோர் செய்வதைச் சத்தியம் என்றே உறுதியாக நம்ப வேண்டும். ஸ்நானம், ஜெபம், ஓமம், தானம், தவம் முதலியவைகளால் ஒருவன் தன் பாவங்களை நிவர்த்தி செய்து கொண்டு, நாராயண பலி செய்தல் வேண்டும்.

“பாவங்களை நிவர்த்தி செய்து கொள்ளாமல் நாராயண பலி செய்வதற்கு முயன்றால் அது நிறைவேறாமல் செய்யும் பொருட்டுப் பூதப் பிரேதப் பைசாசங்கள் பெரிய தடைகளை ஏற்ப்படுத்தும்.

“புண்ணிய காலங்களில் புண்ணிய ஷேத்திரங்களில் பிதுர்களைக் குறித்து எவன் ஒருவன் தானதர்மங்களைச் செய்கிறானோ, அவன் பூதப் பிரேத பைசாசங்களால் தொந்திரவும், துன்பமும் அடைய மாட்டான்.
                         
“சரீரத்தை உண்டாகுவதாலும் நல்ல நெறிகளைப் போதிப்பதாலும். தாய், தந்தை, குரு மூவரும் முதன்மையானவர்கள். எந்தக் காலத்திலும் அவர்களைப் பூஜிப்பது மனிதனின் கடமை.

“தாய், தந்தை மரித்த பிறகு அவர்களைக் குறித்துத் தானம் தர்மங்களை எவன் செய்கிறானோ அவற்றின் பயனை அவனே அடைகிறான். புத் என்ற நரகத்திலிருந்து தாய், தந்தையரைக் கரையேற்றுவதனாலேயே மகனுக்குப் புத்திரன் என்ற பெயர் உண்டாயிற்று. எவன் ஒருவன் தாய் தந்தையர் சொற்படி நடவாமல் தன் பெண்டு பிள்ளைகளின் சொற்படி நடக்கிறானோ, புலையனிலும் புலையனாவான்.

“ஒ, கருடா! கிணற்றிலாவது நதியிலாவது விழுந்து மரித்தவனுக்கும், வாளால் வெட்டப்பட்டு இறந்தவனுக்கும் தற்கொலை செய்து கொண்டவனுக்கும் ஓராண்டுக் காலம் வரையிலும் எந்தவிதக் கிரியைகளும் செய்யலாகாது. கர்மம் செய்வதற்கும் குடும்பத்தில் திருமணம் முதலிய வைபவங்களையும் விசேஷ தர்மங்களையும் செய்யலாகாது. தீர்த்த யாத்திரை, சேஷ்திராடனம் முதலியவற்றிலும் ஈடுபடலாகாது. வருஷ முடிவில் கர்மம் செய்து அதன் பிறகு யாவுஞ் செய்யலாம்.” என்று கூறியருளினார்.

14. பிரேத ஜென்மம் விளைவிக்கும் துன்பம்.

ருடன் கேசவனைத் தொழுது, “ஸ்வாமி! பாவங்களில் எத்தகைய பாவத்தை செய்தவன், பிரேத ஜென்மத்தை அடைகிறான்? அந்த பிரேத ஜென்மத்திலிருந்து எப்படி நீங்குகிறான்? அந்த பிரேத ஜென்மதொடு பூவுலகில் சஞ்சரிப்பது உண்டா அல்லது யமனுடைய காவலிலேயே கிடப்பானோ? இவற்றையெல்லாம் அடியேனுக்கு விளக்கமாக சொல்ல வேண்டும்!” என்று வேண்ட, திருமால் கருடனை நோக்கிக் கூறலானார்.
                                   
“வைன தேயனே! பிறருடைய பொருளையும் மனைவியையும் அபகரிப்பவன் எவனோ, அவனே இறந்த பிறகு வேறு சரீரத்தை யடையாமல் காற்று ரூபமாக பிரேத ஜென்மதையடைந்து பசி தாகத்தோடு வருந்தி யமனுடைய காவலையும் நீங்கி எங்கும் திரிவான்.

“யார் ஒருவன், இறந்தவர்களின் பொருள்களை அபகரித்துக் கொள்பவன், தீவாய் நரகங்களை யெல்லாம் அனுபவிப்பான். மோசம் செய்து அபகரிக்கும் பாவியினும் கொடும்பாவி ஒருவனும் இருக்க மாட்டான்.

“பிரேத ரூபத்தில் யாரையும் நிம்மதியாக இருக்கவிட மாட்டான். பித்ருக்களின் தினத்தில் பிதுர்களை வீட்டுக்குள்ளே போக விடாமல் தடுத்து துரத்துவான். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எதையும் அனுபவிக்க விடமாட்டான். தன் புத்திரன் முதலியோருக்கு சந்ததி உண்டாகாமல் வம்சம் நாசமடையும் படி செய்வான். அவர்களுக்கு பல துன்பங்களை உண்டாக்கி வருத்தப்படுவான்.” என்று கூறி அருளினார்.
           
அப்போது பறவை வேந்தன் பெருமாளை நோக்கி, “ஆதிமூர்த்தி! பிரேத ஜென்மமடைந்தவர் வேறு என்ன செய்வான்? எவ்விதமாக தோற்றமளிப்பான்? பிரேத ஜென்மம் அடைந்திருக்கிறான் என்பதை எப்படி அறிய முடியும்? இவற்றைத் தயவு செய்து நவின்றருள வேண்டும்!” என்று வேண்ட ஸ்ரீமன் நாராயணர் கூறுகிறார்.
                   
“வைன தேயா! பிரேத ஜென்மம் அடைந்தவன் தான் சார்ந்த குலத்தையே அதிகம் பிடிப்பான். தருமங்கள். தானங்கள் செய்பவருக்கும் ஹரி நாம சங்கீர்த்தனம் செய்பவருக்கும் திருவன, பத்ரி முதலிய ஸ்தலங்களுக்குத் தீர்த்த யாத்திரை, ஷேச்த்ராடனம் முதலியவற்றைச் செய்பவருக்கும் பிரேத ஜென்மம் அடைந்தவனால் ஒரு துன்பமும் நேராது.

“நற்கருமம் எதையும் செய்யாதவனுக்கும், பாகவதரை நிந்திப்பவனுக்கும் தெய்வ பக்தி இல்லாதவனுக்கும், புலால் உண்பவனுக்கும் மது அருந்துவோனுக்கும், பொய் சொல்பவனுக்கும் பிரேத ஜென்மம் அடைந்தவனால் அதிகமான துன்பங்கள் உண்டாகும்.

“பாவங்களையே செய்வதும், குழந்தைகள் பிறந்து, பிறந்து இறப்பதற்கும், சுற்றத்தாரோடு ஒற்றுமையில்லாமல் மனம் வேறுபட்டு வாழ்வதற்கும், பசுக்களை போஷிக்க முடியாமற் போவதற்கும், நண்பனோடு விரோதிக்க நேரத்தாலும், வைதிக உபவாச தினமாகிய ஏகாதசி தினத்தில் அன்னம் உண்ணுதலும், ஹரி பக்தி செய்ய முடியாமல் வாழ்நாள் வீணாவதற்கும் ஜெப ஓமங்களைச் செய்ய முடியாமல் போவதற்கும், தந்தை தாயாரை இகழ்வதற்கும், அயலாரை கொல்ல முயற்சிப்பதற்கும், இழிந்தோர் செய்யும் தொழிலைச் செய்து பிழைக்க நேரிடுவதர்க்கும், அதர்மங்களையே எண்ணுதலும், பிதுர் கர்மங்களை விக்கினத்தால் தடைபட்டு குறைபட்டு போதலும், புத்திரன் பகைவனைப் போல தூசிப்பதர்க்கும், மனைவியுடன் சேர்ந்து வாழ முடியாமல் நெடுநாட்கள் பிரிந்து வாழ்வதற்கும்..... இவைகளெல்லாம் பிரேத ஜென்மத்தை அடைந்தவனாலேயே தோன்றுவனவாகும்.

“கருடா! யாருக்கு பிரேத ஜென்மதோஷம் நேரிட்டிருகிறதோ, துக்கமும் துன்பமும் சூழ்ந்து கொண்டே இருக்கும். பிரேத ஜென்மத்தை யடைந்தவன் பயங்கரமான முகத்தோடும் வாள் போன்ற பற்களோடும் தன் குடும்பத்தாரின் கனவில் தோன்றி, ‘அயோ! என்னைக் காப்பாற்றுவோர் யாருமில்லையா?’ என்று பசிதாகத்தோடு வருந்துவான். ‘என் பிரேத ஜென்மம் நீங்கவில்லையே...’ என்று கதறுவான்.” என்றார் திருமால்.

13. யமபுரியும், யமதர்மராஜனும்

“பறவைகளுக்கு அரசே! அங்குஷ்ட பரிமாணமுள்ள ஜீவன் கர்ம சரீரம் பெற்று வன்னிமரத்தை விட்டு யமகிங்கரர்களுடன் 20 காத தூரவழி விஸ்தாரமுள்ள சித்திரகுப்தனது பட்டினத்தின் வழியாக  யமபுரிக்குச் செல்வான்.

“அந்த யம பட்டணம் புண்ணியஞ் செய்தோரின் பார்வைக்கு மிகவும் ரம்மியமாகக் காணப்படும்.

“எனவே, இறந்தவனைக் குறித்துப் பூவுலகில் இரும்பாலாகிய ஊன்றுகோல், உப்பு, பருத்தி, எள்ளோடு பாத்திரம் ஆகிய பொருள்களைத் தானம் செய்ய வேண்டும்.

“இத்தகைய  தானங்களால் யமபுரியுல்லுள்ள யமபரிசாரகர்கள் மிகவும் மகிழ்ந்து ஜீவன் யம பட்டினத்தை நெருங்கியதுமே காலதாமத படுத்தாமல் அவன் வந்திருப்பதை யமதர்மராஜனுக்குத் தெரிவிப்பார்கள்.

“கருடா! பாபம் செய்த ஜீவனுக்கோ! அந்த யமபுரியே பயங்கரமாகத் தோன்றும். அவனுக்கு தர்ம ராஜனாகிய யமனும் அவனது தூதர்களும், அஞ்சத்தக்க பயங்கர ரூபத்தோடு தோற்றமளிப்பார்கள். அந்த பாவஞ் செய்தவனும் அவர்களைக் கண்டு பயந்து பயங்கரமாக ஓலமிடுவான்.

“புண்ணியஞ் செய்த ஜீவனுக்கு யமதர்மராஜன் நல்ல ரூபத்தோடு தோற்றமளிப்பான். புண்ணியம் செய்த ஜீவன் யமனைக் கண்டு மகிழ்ந்து இறைவனின் தெய்வீக ஆட்சியை கண்டு வியப்பான்.

“யம தர்மராஜன் ஒருவனேதான் என்றாலும், ‘பாபிக்குப் பயங்கர ரூபதொடும், புண்ணியஞ் செய்தவனுக்கு நல்ல ரூபதொடும்’ தோன்றுவான். புண்ணியஞ் செய்த ஜீவன் யமனருகே  தோன்றுவானாயின், 'இந்த ஜீவன் மண்டல மார்க்கமாக பிரம்ம லோகம் சேரத் தக்கவன்' என்று தான்  வீற்றிருக்கும் சிம்மாசனிதிலிருந்து  சட்டென்று எழுந்து நின்று மரியாதை செலுத்துவான். யம தூதர்களும் வரிசையாக மரியாதை செலுத்துவார்கள்.

“பாவஞ் செய்த ஜீவனை பாசத்தில் கட்டிப் பிணைத்து உலக்கையால் ஓச்சி ஆடுமாடுகளைப் போல இழுத்துக் கொண்டு காலன்முன் நிறுத்துவார்கள். அங்கு பூர்வ ஜென்மத்தில் அந்த ஜீவன் செய்த புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப வேறு ஜென்மம் அடைவான்.

“அதிகம் புண்ணியம் செய்திருந்தால் அந்த ஜீவன் யம தூதர்களால் துன்புறுத்தப்படாமல் யமதர்மன் முன்பு சென்று தேவனாக மாறித் தேவருலகம் செல்வான். பாபம் செய்தவனாகின் யமதர்மனைக் காண்பதற்கும் அஞ்சுவான். உடல் நடுங்க பயப்படுவான். தூதர்கள் யமதர்மன் கட்டளை ஏற்று நரகத்தில் விழுந்து பிறகு கிருமி புழு முதலியவற்றின் ஜென்மத்தை அடைவான்.

“அந்த ஜீவனுக்குப் புண்ணியம் மிதமாக இருக்குமானால் முன்பு போல் மானிடப் பிறவியை பெறுவான். தான தருமங்களைச் செய்தவன் யாராயினும், எந்த ஜென்மத்தை அடைந்தாலும் அவன் செய்த தானதர்ம பயன்களை அந்த ஜென்மத்தில் அடைவான்.
                                         
“செல்வந்தன், அறிவிலே பேரறிஞன், வலுவிலே பலசாலி, கலைத் துறையில் பெருங் கலைஞன், விஞ்ஞானி, மதத் தலைவர் என்றெல்லாம் புகழ்ப் பெறுவான். அவன் இறந்தவுடனேயே அவன் உடலில் அரைஞான் கயிறு கூட அறுத்தெறியப்பட்டு விடும். அவன் ஜீவன் பிரிந்த உடனே, அவன் உடலை குழியில் புதைத்து மண்ணோடு மண்ணாகும்.

“மானிடப் பிறவி கிடைப்பது அரிது. அப்படியே கிடைத்தாலும் கூன், குருடு, செவிடு, மலடு நீங்கிப் பிறத்தல் அரிது. ஒழுக்கத்தில் பெற வேண்டிய முக்தியை பெறவில்லை என்றால், தவம் முதலியவற்றைச் செய்து வருந்தித் தன் கரத்தில் அடைந்த அமிர்தம் நிறைந்த பொற்கவசத்தைச்  சிந்தி பூமியில் கவிழ்ந்தவனுக்கு ஒப்பாகுவான்!” என்று திருமால் ஓதியருளினார்.

“தர்மத்துவஜன் என்ற ஒருவன், சதாசர்வ காலமும், யமனருகிலேயே இருந்து கொண்டிருப்பான். பூமியில் இறந்தவனைக் குறித்து கோதுமை, கடலை, மொச்சை, எள், கொள்ளு, பயிறு, துவரை ஆகிய இந்த ஏழு வகையான தானியங்களைப் பாத்திரங்களில் வைத்துத் தானஞ் செய்தால், அந்தத் தர்மத்துவஜன் திருப்தி அடைந்து யமனிடத்தில் ‘இந்த ஜீவன் நல்லவன், புண்ணியஞ் செய்த புனிதன்!’ என்று விண்ணபஞ் செய்வான்.

12. 28 வகை நரகங்கள்

Related image1.பிறன்மனைவி, குழந்தை, பொருள் இவற்றை கொள்ளையடிப்போர் அடையுமிடம் தாமிரை நரகம்.

2 . கணவன் அல்லது மனைவியை வஞ்சித்து வாழ்வோர் கண்களில் இருள், கவ்விய மூர்ச்சித்து விழும் நரகம் அந்த தாமிஸ்ரம்.

3. அக்கிரமமாகப் பிறருடைய குடும்பங்களை அழித்து பலவந்தமாகப் பொருள் பறிக்கும் சுயநலக்காரர்கள் அடையும் நரகம் ரௌரவமாகும்.

4. குரு என்ற ஒருவகையான அகோரமான மான்கள் பாவிகளைச் சூழ்ந்து துன்புறுத்தும் நரகம் மஹா ரௌரவமாகும்.

5. தன் சுவைக்காக ஜீவன்களை வதைத்தும் சித்திரவதை செய்தும் புவியில் வாழ்ந்து மரித்தவன் அடையும் நரகம் கும்பி பாகம்.

6. பெரியோரையும்,  பெற்றோரையும் துன்புறுத்திய வெறியர்கள் அடையும் நரகம் காலசூத்திரம்.

7. தன் தெய்வத்தை நிந்தித்து தனக்குரிய தர்மங்களை விடுத்த அதர்மிகளடையும் நரகம் அசிபத்திரமாகும்.

8 .அநியாயமாகப் பிறரை தண்டித்து அகந்தையுடன் அநீதிகளும் பலவகைக் கொடுமைகளும் புரிந்தவர்கள் அடையும் நரகம் பன்றிமுகம்.

9. சித்திரவதை, துரோகம், கொலை செய்த கொடியவர்கள் அடையும் நரகம் அந்தகூபம்.

10. தான் மட்டும் உண்டு பிறரைத் துளைக்கும் கிருமிகள் போல வாழ்ந்து, பக்தியில்லாத பாவிகள் அடையும் நரகம் கிருமி போஜனம்.

11. பிறர் உரிமைகளையும் உடமைகளையும் தனக்கிருக்கும் வலிமையால் அபகரித்துக் கொள்ளும் பலாத்காரம் பாவிகளைடையும் நரகம் அக்கினி குண்டம்.

12. கூடத் தகாத ஆண் அல்லது பெண்ணைக் கட்டித் தழுவிக் கூடி மகிழும் மோக வெறியர்கள் அடையும் நரகம் வக்ர கண்டகம்.

13. நன்மை, தீமை, உயர்வு, தாழ்வு இவற்றை பாராமல் தரங்கெட்டு எல்லோருடனும் கூடி மகிழும் மோகந்தகாரப் பாவிகள் அடையும் நரகம் சான்மலியாகும்.

14. அதிகார வெறியாலோ, கபடவேசத்தாலோ, நயவஞ்சகத்தாலோ நல்வழிகளைக் கெடுக்கும் அதர்மிகள் அடையும் நரகம் வைதரணி.

15. கூச்சமில்லாமல் இழிமகளைக் கூடி ஒழுங்கீனங்கள் புரிந்தும் தன வழியை விட்டு ஓர் இலட்சியமுமில்லாமல் மிருகங்களைப் போல் திரியும் கயவர்கள் அடையும் நரகம் பூயோதம்.

16. பிராணிகளைத் துன்புறுத்திக் கொலை புரியும் கொடுமைக்காரர்கள் அடையும் நரகம் பிராணரோதம்.

17. டம்பத்திற்க்காக பசு வதை புரிந்து யாகம் முதலியவற்றைச் செய்யும் பித்தலாட்டகாரர்கள் அடையும் நரகம் விசஸனம்.

18. வாழ்க்கைத் துணைவியை வற்புறுத்தி  விபரீத மோக இச்சைக்கு ஆளாகிக் கெடுக்கும் தீயோர்கள் அடையும் நரகம் லாலா பக்ஷம்.

19. வீடுகளுக்கு தீ வைப்பது, சூறையாடுவது, ஜீவ வதை புரிவது, விஷமூட்டுவது, கூட்டங் கூட்டமாகக் குடிமக்களைக் கொல்வது போன்ற செயல்களைச் செய்த பாவிகள் அடையும் நரகம் சாரமேயாதனம்.

20. பொய்சாட்சி கூறுதல் முதலிய அகம்பாவச் செயல்புரியும் பாவிகள் அடையும் நரகம் அவீசி.

21. எக்குலத்தினராயினும் மதுபோதைப் பொருள்களைக் கொடுத்தும் குடித்தும் குடிகளைக் கெடுக்கும் குடிகேடர்கள் அடையும் நரகம் பரிபாதனம்.

22. தன்னை மட்டுமே பெரியதாய் மதித்து பெரியோரையும், நல்லோரையும் அவமதித்து தீச்செயல் புரிந்த பாவிகள் அடையும் நரகம் கஷாரகர்த்தமம்.

23. நரமேத யாகம் புரிதல், ஆணாயினும் பெண்ணாயினும் மனித மாமிசம் புசித்தல், சாதுவான பிராணிகளை வதைத்தல் முதலான தீவினை புரிந்தோரை முன்னின்று வதைக்கு அவதிப்படும் நரகம் ரகோஷாகனம்.

24. எவ்விதத் தீமையும் புரியோதாரைக் கொல்லுதல், நயவஞ்சகமாகக் கொல்லுதல், தற்கொலை செய்து கொள்ளுதல், நம்பிக்கைத் துரோகம் புரிதல் இவர்கள் அடையும் நரகம் சூலரோதம்.

25. தீமையே புரிந்த துரோகிகளடையும் நரகம் தந்த சூகம்.

26. பிராணிகளைக் கொடூரமாக வதைத்த கொடுமைக்காரர்கள் அடையும் நரகம் வடாரேவதம்.

27. வீட்டுக்கு வந்த விருந்தினரை வெறுத்து நிந்தித்த லோபிகளும் பகிர்ந்துண்ண விரும்பாத சுயனலவாதிகாலும் அடையும் நரகம் பரியாவர்த்தனகம்.

28. செல்வச் செருக்காலும், செல்வாக்கினாலும், பிறரைத் துன்புறுத்துகிறவர்களும் அநீதியாய்ப் பொருள் சம்பாதித்து, அறநெறிகளில் செலவிடாமல் பதுக்கி வைப்பவர்கள் அடையும் நரகம் சூசிமுகம் என்பதாகும்.
 
“இத்தகைய இருபதெட்டு வகை நரகங்கள் ஒவ்வொரு வகையிலும் எராளமானவையாக மிகக் கொடியனவாக அமைந்திருக்கும்.

“இறந்தவனைக் குறித்து நாள்தோறும் கொடுக்கப்படும் உதககும்ப தானத்தை யமதூதர்கள் பெற்று திருப்தி அடைவார்கள். மாசிக வருஷ பதிகம் முதலியவற்றால் ஜீவன் திருப்தியடைவான். அவற்றால் யம கிங்கரர்களும் திருப்தி அடைவார்கள்.
                                                           
“வைனதேயா! ஒருவன் இறந்த ஓராண்டு முடியுந் தருவாயில் அவனது ஜீவன் பிண்டத்தாலாகிய சரீரத்தோடு யமபுரியை அடைவான் என்றோமே! அந்த ஜீவன் யம லோகத்தை அடையும் முன்பாக அந்த பிண்ட சரீரத்தை தவிர்த்து அங்குஷ்ட பரிமாணமுள்ள ஒரு புதிய வடிவம் பெற்று ஒரு வன்னி மரத்தில் சிறிது காலம் தங்கியிருந்து, அதன் பிறகு கர்மத்தாலாகிய சரீரத்தை பெறுவான்.

“அப்போது யம கிங்கர்கள் அந்த ஜீவனை யமபுரிக்கு அழைத்துச் சென்று தர்ம ராஜனின் கொலுமண்டபத்திற்குக்  கொண்டு செல்வார்கள்.” என்று திருமால் கூறியருளினார்.

11. சித்திரகுப்தன் கணக்கும் நரகங்களும்

சூதமா முனிவர் சௌனகாதி முனிவர்களுக்கு பன்னிரண்டு சிரவணரின் சரிதத்தைச் சொல்லிய பிறகு மேலும் தொடர்ந்து சொன்னார்.

திருமால் கருடனை நோக்கி கூறலானார், “கருடா! ஜீவர்கள் பூவுலகில் வாழ்ந்த காலத்தில் செய்த பாப புண்ணியங்களை எல்லாம் சித்திர குப்தன் என்ற யம லோக கணக்கன் சிரவணர்களின் மூலமாக அறிந்து யம தர்மராஜனுக்கு அறிவித்து, அவனது உத்தரவுப்படியே அவரவரது பாவங்களின் தன்மைக்கேற்ற தண்டனை வாசித்துச் சொல்ல, யமதர்மன் தன கிங்கர்களைக் கொண்டு அத்தண்டனைகளை அவ்வவ்போதே நிறைவேற்றிச் செய்து விடுவான். 

ஜீவனானவன் வாக்கால் செய்த பாவங்களை வாக்காலும், உடலால் செய்த பாவப் புண்ணியங்களை உடலாலும் மனத்தால் செய்த பாவப் புண்ணியங்களை மனத்தாலும் அனுபவிக்க வேண்டியிருக்கும்.

பெரியோரை இகழ்ந்து நீச மொழிகளால் ஏசிபேசினால்  பாவங்கள் உண்டாகி வாயிலிருந்து புழுக்களாக சொரியும்.

புண்ணியங்களை மட்டும் செய்தவர்கள் நல்ல சரீரத்தோடு நோய் இன்றி இன்பமாக வாழ்வார்கள்.

பிறவுயிர்களை ஊட்டி வதைத்தவர்கள் கொடூரமான சரீரத்தை அடைந்து துன்புறுவார்கள்.

பக்ஷி ராஜனான கருடன், திருமகள் கேள்வனைச் சிரம் வணங்கி, கார்மேக வண்ணரே! நரகங்கள் என்பவை யாவை? அவை எவ்வாறு இருக்கின்றன? அவற்றில் யார் யார் எவ்வாறு தண்டிக்கப்படுகின்றார்கள்? அவற்றை அடியேனுக்கு விபரமாக தெரிவிக்க வேண்டும்.” என்று கேட்க,

கார்மேக வண்ணன் கருடனை நோக்கி, “காசிப் புத்திரனே காலதேவனால் நிச்சயிக்கப்பட்ட தீவாய் நரகங்கள் எண்பத்து நான்கு லட்சமிருக்கின்றன. அவற்றில் கொடிய நரகங்கள் 28 இருகின்றன. அவை……………………..

நரக தண்டனைகளை நிச்சயிப்பது நாமே....

01. தாமிஸ்ரம் பிறருக்கு சொந்தமான பொருளை அகபரிப்பது குற்றமாகும் . பிறருக்கு சொந்தமான மற்றவர் மனைவியை விரும்புவதும் , அபகர...